தமிழகத்தில் 14 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டி அனல் காற்று வீசியது.
தமிழகத்தில், 19 ஆண்டுகளுக்கு பின், நேற்று உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. வேலுாரில் அதிகபட்சமாக, 44.3 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல், 22ம் தேதியில், இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, 'ஃபானி' புயலாக மாறியது. இந்த புயலின் சுழற்சி காரணமாக, கடலில் இருந்து வரும் ஈரப்பதமான காற்று, முழுவதுமாக புயலால் உறிஞ்சப்பட்டு, நிலப்பகுதி மிகவும் வறண்டு காணப்படுகிறது.
தமிழக கடற்பகுதியை, 10 நாட்களாக மிரட்டி வந்த, ஃபானி புயல், இன்று ஒடிசாவில் கரை கடக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, தமிழகத்தில், ஏப்ரல், மே மாத வெயிலின் அளவு, 19 ஆண்டுகளுக்கு பின், உச்சபட்சமாக பதிவானது.
வேலுாரில், 44.3 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. அதேபோல, திருத்தணியிலும், 44 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. சென்னையில், 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நுங்கம்பாக்கத்தில், 41.5, விமான நிலையத்தில், 41.6 என, பதிவானது.
இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருக்கிறது. இதில் வேலூர், திருத்தணியில் 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியது. திருச்சி, சென்னை, மதுரையில் 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.