சித்திக் குழு, ஸ்ரீதர் குழு பரிந்துரைகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாதவது... "தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட சித்திக் குழுவின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கையை ஸ்ரீதர் குழு தாக்கல் செய்த சில வாரங்களில் சித்திக் குழு அறிக்கையும் தாக்கலாகியிருப்பது அரசு ஊழியர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் பல இருந்தாலும், அவற்றில் மிக முக்கியமானவை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப் படுத்த வேண்டும், ஊதிய விகிதங்களில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை தாமதமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், விடுபட்ட 21 மாதங்களுக்காக ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் ஆகியவை ஆகும். 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்பதால், அது குறித்து அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்துக் கொள்ள முடியும். ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்து பரிந்துரைப்பதற்கான சித்திக் குழுவும், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஸ்ரீதர் குழுவும் அறிக்கைகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் தான் இச்சிக்கலைத் தீர்க்க தடையாக இருந்தது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான குழு 33 மாதங்களுக்குப் பிறகு கடந்த நவம்பர் 27-ஆம் தேதி அதன் அறிக்கையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தாக்கல் செய்தது. அடுத்த 40 நாட்களில் ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நிதித்துறையின் செலவுகள் பிரிவு செயலாளர் எம்.ஏ.சித்திக் தலைமையிலான குழு முதலமைச்சரிடம் தாக்கல் செய்திருக்கிறது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றும் விஷயத்தில் அரசுக்கு தெளிவான வழிகாட்டல் கிடைத்துள்ளது.
ஸ்ரீதர் குழு அறிக்கை, சித்திக் குழு அறிக்கை ஆகியவை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. புதிய ஓய்வூதியத் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, 01.04.2003 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. கடந்த 15 ஆண்டுகளில் அரசு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை என்பதால் அவர்களின் பணி ஓய்வுக்குப் பிந்தையக் காலம் பரிதாபமானதாக மாறியிருக்கிறது. இப்போது பணியில் இருப்பவர்களின் எதிர்காலமும் பொருளாதார ரீதியாக இருண்டு கிடக்கிறது. அவர்களிடம் இருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகை எங்கு போனது? யாருடையக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது? என்ற வினாக்களுக்கு விடை இல்லை.
அதேபோல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நிலவும் ஊதிய முரண்பாடும் உடனடியாகக் களையப்பட வேண்டியவை ஆகும். 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களை விட, அதன்பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.15,500 குறைவு ஆகும். இதே போல், மேலும் பல துறைகளின் ஊழியர்களிடையேயும் கடுமையான ஊதிய முரண்பாடு நிலவுகிறது. ஒரே மாதிரியான கல்வித் தகுதியும், ஒரே மாதிரியான பணியும் கொண்ட இரு பிரிவினருக்கு வெவ்வேறு ஊதியம் வழங்கப்படுவதை விட கொடுமையான பாகுபாடு இருக்க முடியாது. இந்த முரண்பாடுகளை களைய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த திசம்பர் 4-ஆம் தேதியிலிருந்து தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர். இப்பிரச்சினையில் தலையிட்ட மதுரை உயர்நீதிமன்றம், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்த அரசின் நிலைப்பாட்டை நாளைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. எனவே, மேற்கண்ட கோரிக்கைகள் குறித்த ஸ்ரீதர் குழு, சித்திக் குழு பரிந்துரைகள் மீது தமிழக அரசு சாதகமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றை நாளை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்