கோவை: ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி கோவையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவனின் முக தோற்றத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாளை மகா சிவராத்திரியையொட்டி இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்து பேசுகிறார். இந்த விழாவில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தராராஜே சிந்தியா, ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.
விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மாலை 5.20 மணிக்கு கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார்.
ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை திறப்பு விழா முடிந்தபின்னர், மறுநாள் 25-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கோவை வருகிறார். அவர் 27-ம் தேதி வரை ஈஷா யோகா மையத்தில் தங்கி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவைக்கு முக்கிய பிரமுகர்கள் வருவதையொட்டி நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.