மழையில் நனைந்த நெல்லை விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்: PMK

மழையில் நனைந்த நெல்லை விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Oct 19, 2020, 11:49 AM IST
மழையில் நனைந்த நெல்லை விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்: PMK title=

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் (Rain) நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் உழவர்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் பருவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. புதிய கொள்முதல் பருவத்தில் உயர்த்தப்பட்ட விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும்  என்ற எதிர்பார்ப்பு, செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் செயல்படாதது, காவிரி பாசன மாவட்டங்களில் எட்டப்பட்டுள்ள அதிக விளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்ய முடியாத அளவுக்கு நெல் மூட்டைகள் குவித்து வருகின்றன. அதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் பல ஆயிரம் நெல் மூட்டைகள் குவிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்படுவதற்காக காத்துக் கிடக்கின்றன.

 

ALSO READ | அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: PMK!

கடந்த சில நாட்களாக பெய்த மழையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் குவித்து வைத்திருந்த நெல் மழையில் நனைந்து வீணாகியிருக்கிறது. குறைந்தபட்சம் 50 ஆயிரம் குவிண்டால்களுக்கும் அதிகமான நெல் வீணாகியிருப்பதாகவும், இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் பல ஆயிரங்களில் தொடங்கி சில லட்சங்கள் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. நடப்பாண்டின் குறுவை பருவத்தில் நல்ல விளைச்சல் கிடைத்ததால், கூடுதல் லாபம் கிடைக்கும்; கடந்த பருவங்களில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவும், வாங்கிய கடனை அடைக்கவும் இது உதவும் என்று உழவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், மழையில் நெல் மூட்டைகள் நனைந்தது உழவர்களின் கனவுகளை அடியோடு சிதைத்து விட்டது.

நெல் மூட்டைகள் நனைந்ததற்கு உழவர்கள் எந்த வகையிலும் காரணமல்ல. அதிக விளைச்சலாலும்,  பிற காரணங்களாலும் நெல் மூட்டைகள் அதிக அளவில் குவிந்ததும், அதனால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதும் உண்மை தான். ஆனால், இத்தகைய சூழல் உருவாகும்  என்பது ஏற்கனவே தெரிந்திருந்தது என்பதால், அதை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசும், நெல் கொள்முதலுக்கு பொறுப்பான மண்டல அதிகாரிகளும் தொலைநோக்குப் பார்வையுடன் செய்து இருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியது நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தோல்வியாகும்.

நெல் கொள்முதல் தொடர்பாக கடந்த 2-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், புதிய கொள்முதல் பருவம் தொடங்கியும் காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப் படாதது குறித்தும், அதனால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவது குறித்தும் குறிப்பிட்டு இருந்தேன். இனிவரும் காலங்களிலும் நெல் வீணாவதைத் தடுக்க கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்; கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதை செய்திருந்தால் இந்த அளவுக்கு நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்ததை தவிர்த்திருக்க முடியும்.

மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைந்து விட்ட நிலையில், அதற்கான காரணங்களை  பகுப்பாய்வு செய்வதை விட, பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதும், இனி அத்தகைய பாதிப்பு ஏற்படாமல்  தடுக்க நடவடிக்கைகளை எடுப்பதும் தான் சரியானதாக இருக்கும். நெல் மூட்டைகள் நனைந்ததற்கு உழவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல எனும் நிலையில், ஈரப்பதம் குறித்த விதிகளை தளர்த்தி நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவும், அவை மேலும் பாதிக்கப்படாத அளவுக்கு காய வைத்து அரிசியாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காத வகையில் கொள்முதல் விரைவுபடுத்த வேண்டும்; இதற்காக கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். வாய்ப்புகள் இருந்தால் களத்து மேடுகளில் இருந்து நெல் மூட்டைகளை நேரடியாக கொள்முதல் செய்வதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.

 

ALSO READ | தாமதிக்காமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: PMK

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News