சென்னை மற்றும் காஞ்சிபுரம் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பொழிந்து வருகிறது. கோயம்பேடு, அரும்பாக்கம், முகப்பேர், கே.கே.நகர், திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அவ்வப்போது வந்து செல்லும் மழை காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலையில் முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் ஓரிக்கை, செவிலிமேடு, ஸ்ரீபெரும்புதூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
புதுச்சேரியிலும் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. உப்பளம், கடற்கரை சாலை, புதியபேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது!