Senthil Balaji Latest Update: கைதாகியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த நிலையில், அதை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்க மறுத்து திருப்பியனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாலை கைது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இதய ரத்தகுழாய்களில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
அவரை வரும் ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மறுபக்கம், செந்தில் பாலாஜி மனைவி மேகலை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், செந்தில் பாலாஜியிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ கைதிற்கான காரணத்தை அதிகாரிகள் கூறவில்லை என்றும் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும் மனுவில் குறிப்பிட்டனர்.
மேலும், இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜியை பரிசோதித்து இரு மருத்துவக் குழுவினர் அளித்த அறிக்கையை சந்தேகிக்க முடியாது எனக்கூறி அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளித்து உத்தரவிட்டது.
மேலும் படிக்க | அமலாக்கத்துறை வைக்கும் செக்... காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படும் செந்தில் பாலாஜி!
அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் அமலாக்க பிரிவினர் தங்கள் மருத்துவக் குழுவினரை கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதி அளித்து உத்தரவிட்டனர். மேலும் சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் உள்ள நாட்களுடன் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் மனைவியின் ஆட்கொணர்வு மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்க பிரிவினருக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை வரும் ஜூன் 22ஆம் தேதிக்கு தள்ளிவிவைத்தனர்.
அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்க பிரிவினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அல்லி, உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்வதற்காக மனு மீதான விசாரணையை நாளை தள்ளிவைத்ததுடன் அமலாக்க பிரிவினரின் மனு மீது நாளை (ஜூலை 16) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருக்கும் மின்சாரத்துறை, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை வேறு அமைச்சர்களுக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து, மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் முத்துச்சாமிக்கும் ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. மேலும், இலாகாக்கள் இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என கூறப்பட்டது.
அந்த வகையில், தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அந்த பரிந்துரைக்கு மறுப்பு தெரிவித்து ஆளுநர் கடிதம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அந்த கடிதத்தில்,"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவக் காரணங்களால் இலாக்காக்களை மாறுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், அவரை கைது செய்திருக்கிறார்கள், அதனை குறிப்பிடாததால் இந்த பரிந்துரையை ஏற்க இயலாது" என ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து, இதனை உறுதிசெய்தார். மேலும், தமிழ்நாடு அரசின் பரிந்துரையை 'Misleading and Incorrect' என ஆளுநர் குறிப்பிட்டு, பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்தார். ஆளுநரின் மறுப்பை தொடர்ந்து, அதிகாரிகளை கலந்தாலோசித்த பின்னர் முதலமைச்சர் தரப்பில் தக்க பதில் அளித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனை ஆளுநர் ஏற்பார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
திமுக அரசு அனுப்பிவைத்த பல்வேறு கோப்புகளை, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர், இந்த விவகாரத்திலும் அரசுக்கு நெருக்கடி அளிக்கிறார் என அரசியல் வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. சட்டப்பேரவையில் இருந்து கட்சி மேடைகள் வரை திமுகவினர் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநருக்கு எதிரான தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | யார் இந்த செந்தில் பாலாஜி? இவரது அரசியல் பயணம் இப்படிபட்டதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ