கடந்த செப்டம்பர் 22-ம் தேதி 2016-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிச.21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
முன்னதாக இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, தி.மு.க. மட்டும் அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது எழுந்த பணம் பட்டுவாடா புகாரால் தேர்தல் தடை செய்யப்படிருந்தது.
அதை தொடர்ந்து ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில் சென்னை ஆர்.கே.நகருக்கு, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்காக விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
இந்நிலையில், தற்போது சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை இன்று காலை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியின் புதிய தி.மு.க. வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சுமார் 40 நிமிடம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்கெனவே ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன், கடந்த முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருதுகணேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
DMK Working President MK Stalin announces Marudhu Ganesh as candidate for #RKNagar by-elections. pic.twitter.com/nsu2ViYwJp
— ANI (@ANI) November 25, 2017
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், தோழமைக்கட்சிகளின் ஆதரவுடன் ஆர்.கே.நகர் தொகுதியில், திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று அறிவித்தார். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.