அமித்ஷா உடனான சந்திப்பிற்கு பின்னர், பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிடவில்லை என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போட்டியிடுவார்கள் என்று சமீபத்தில் அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தன் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 2017-ஆம் ஆண்டு டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தினர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டம் நீண்ட காலம் நடைப்பெற்றது. பிரதமர் மோடி சந்தித்தே ஆக வேண்டும் என விவசாயிகள் நிர்வாணமாகக் கூட போராட்டம் நடத்தினர். எனினும், இது எந்த முடிவையும் எட்டாமல் முடிவடைந்தது.
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடிக்கு எதிராக 111 தமிழக விவசாயிகள் போட்டியிடுவார்கள் என்று சமீபத்தில் அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் பாஜக தலைவர் அமித்ஷாவை அய்யாக்கண்ணு நேற்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தமிழக அமைச்சர் தங்கமணி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.
அமித்ஷா உடனான சந்திப்பிற்கு பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அய்யாக்கண்ணு, அமித்ஷா உடனான சந்திப்பு மன நிறைவு அளிப்பதாகவும், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதால் மோடியை எதிர்த்து போட்டியிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.