தமிழகத்தில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள்?

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.  

Written by - RK Spark | Last Updated : Jul 19, 2023, 05:36 PM IST
  • தமிழக அரசு சட்டம் இயற்ற முடியாது.
  • தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு தகுதி இல்லை.
  • விளையாட்டு நிறுவனங்கள் சுய கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள்?  title=

ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.  ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகவாச்சாரி, மணிசங்கர், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.  அப்போது அவர்கள், தமிழக அரசு சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது என்றும், மத்திய அரசின் அறிவிப்புக்கு விரோதமாக தமிழக அரசு சட்டம் இயற்ற முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

மேலும் படிக்க | பெங்களூருவில் 2-வது நாளாக இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டம்

ஏராளமான கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாட அனுமதிக்கப்படுகிறது என்றும், ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது தென் மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக கூறுவதற்கு  எந்த புள்ளிவிவரங்களும் இல்லை என தெரிவித்தனர். நீதிபதி சந்துரு அரசுக்கு அறிக்கை அளிக்கும் முன் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கருத்துக்களை கோரவில்லை எனவும்,  முறையான விசாரணை நடத்தாதது பாரபட்சமானது என்றும் குறிப்பிட்டனர்.  திறமை விளையாட்டான ரம்மியை ஆன்லைனில் தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு தகுதி இல்லை என்றும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தனி விதிமுறைகளையும், சுய கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவதாக விளக்கமளித்தனர். 

ஆன்லைன் விளையாட்டுக்களில் மோசடிக்கு எதிராக போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதாகவும்,  உயர் நீதிமன்ற தீர்ப்புகளை செல்லாததாக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளதாகவும் வாதிட்டனர்.  ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்த நீதிபதி சந்துரு குழு, இரு வாரங்களில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்ததாகவும், அந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.  தொடர்ந்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும், மத்திய அரசின் சட்டப்படி, ஆன்லைன் விளையாட்டுக்களின் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும் எனவும் கூறினார்.  ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டமியற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டார். இதனையடுத்து தமிழக அரசின் பதில் வாதத்திற்காக, விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க | எல்லை தாண்டிய காதலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்... பயங்கரவாத எதிர்ப்புப் படை விசாரணை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News