அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் தட்டுப்பாடு இல்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அம்பத்தூர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், மாஃபா. பாண்டியராஜன், பெஞ்ஜமின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் தற்போதுள்ள +2 வகுப்பிற்கான பாடத்திட்டங்களை மாணவர்கள் படிக்கும்போது, நீட் தேர்வு மட்டுமல்லாது அனைத்து தேர்வுகளையும் மாணவர்கள் சிறந்த முறையில் எதிர்கொள்ள முடியும்.
அனைத்து அரசுப்பள்ளிகளையும் தனியார் பள்ளிகள் அளவிற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப்பள்ளிகளில் தற்போது ஆசிரியர் தட்டுப்பாடு இல்லை. 2017 - 2018 கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குள் மடிக்கணினி வழங்கப்படும்.
மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற 2000 சொற்றொடர்கள் கொண்ட மென்பொருளும் அத்துடன் வழங்கப்படவுள்ளது" என்று தெரிவித்தார்.