அதிகாரப்பகிர்வை பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு எதிராக நடைமுறைப்படுத்த முடியாது என ராஜபக்சே கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் - தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., இலங்கையில் 1987, 13-வது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தில் உறுதி செய்யப்பட்ட முழு அதிகாரப்பகிர்வை பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் எதிராக நடைமுறைப்படுத்த முடியாது என்று இந்து நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியிருப்பது ஆணவத்தின் உச்சம். இது வன்மையான கண்டனத்துக்குரியது.
மேலும், தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வளர்ச்சியில் தான் கவனம் செலுத்துவோம் என்றும் அரசியலுக்கும் அதிகாரப்பகிர்விற்கும் முக்கியத்துவம் அளிக்க மாட்டோம் என்றும் கூறியிருக்கிறார்.
அரசு தனது குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் செயல்படும் ஆட்சி கொடுங்கோன்மைக்கே வழிவகுக்கும்.
நாட்டின் அதிபர் தனது சொந்த குடிமக்களை சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்கள் என வேறுபடுத்திப் பார்ப்பது. அங்கே வாழும் தமிழர்களின் வாழ்வுரிமைகளை கேள்விக்குள்ளாக்குகிறது.
இந்திய அரசும் ஐநா மன்றமும் தலையிட்டு அந்நாட்டின் குடிமக்களாகிய தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும், ஜனநாயகத்துக்கு எதிரான இந்த போக்கை கண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.