நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவை குறைக்கும், நேரத்தையும் குறைக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்!!
மக்களவை முதல் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பாதுகாப்புக்காகவும், மதசார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் நாடாளுமன்றத்தில் அழுத்தமாக குரல் கொடுப்போம் என தெரிவித்தார்.
மேலும், ஹட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும் என வலியுறுத்திய அவர், தமிழகம் பாலைவனமாகும் நிலையை ஏற்படுத்தும் நிலையில் ஆற்று நீர் சிக்கல் தீர்க்கப்படாமல் உள்ளது எனவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கை எனும் பெயரில் இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை திணிக்கும் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் குரல் கொடுப்போம் எனவும் உறுதியளித்தார்.
இதை தொடர்ந்து அவர் கூறுகையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவை குறைக்கும், நேரத்தையும் குறைக்கும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம். இரட்டை தலைமை என்பதை டெல்லி தலைமை மற்றும் தமிழக தலைமை என எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.