அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி என்ற வாதத்தை தகர்த்தெறிந்த எடப்பாடி

சசிகலா சிறையில் இருந்து வந்ததும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்கள் உட்பட பலரும்  சசிகலாவிடம் சரணடைந்து விடுவார்கள் என கூறப்பட்டு வந்தது. இதற்கேற்ப சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வரும்போது, உலகமே வியந்து பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என வரவேற்பு பிரமாண்டமாக நடந்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 25, 2021, 01:10 PM IST
  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலேயே அவரது சுயரூபத்தை தெரிந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் ஒன்றுகூடி கட்சியில் இருந்து டிடிவியை ஒதுக்கி விட்டனர்.
  • போராட்டங்களால் இந்த ஆட்சி இன்றோ நாளையோ கவிழ்ந்துவிடும் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
  • சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வரும்போது, உலகமே வியந்து பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என வரவேற்பு பிரமாண்டமாக நடந்தது.
அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி என்ற வாதத்தை தகர்த்தெறிந்த எடப்பாடி title=

தமிழக அரசியலில் சிறந்த சாணக்கியன், மிகப்பெரிய ராஜதந்திரி என போற்றப்பட்டவர் கலைஞர் மு.கருணாநிதி, இரும்பு பெண்மணி என வியந்து பார்க்கப்பட்டவர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா. இவர்கள் இருவரும் மறைந்த பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டது.

இந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினி உள்ளிட்ட சினிமா நடிகர்களும், சகாயம் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள்  உட்பட பலரும் களமிறங்க ஆசைப்பட்டனர். இந்த தருணத்தில் தமிழக முதல்வராக எடப்பாடி பொறுப்பேற்றார். ஆனால், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் பின்னணியில்தான் இந்த ஆட்சி இயங்கியது என்று பரவலமாக பேசப்பட்டது. காரணம், ஜெயலலிதா இருந்தபோதே அவர் பின்னிருந்து இயக்கியதாக கூறி வந்தனர்.

அது மட்டுமல்ல, ஜெயலலிதா (J.Jayalaitha) மறைவுக்குப்பிறகு உடைய இருந்த கட்சியை சசிகலாதான் ஒருங்கிணைத்து, டிடிவி தினகரனை துணைபொதுச் செயலாளராக ஆக்கிவிட்டு, ஆட்சியின் தலைமையை எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சென்றார் எனவும், இந்த ஆட்சியை மேற்பார்வையிடுவதற்காகத்தான் துணை பொதுச்செயலாளராக டிவிடி தினகரனை ஆக்கிவிட்டு சென்றார்  என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டுவந்தது.

ALSO READ | அரவக்குறிச்சியில் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சார களத்தில் எடப்பாடி பழனிச்சாமி

ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலேயே அவரது சுயரூபத்தை தெரிந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் ஒன்றுகூடி கட்சியில் இருந்து டிடிவியை ஒதுக்கி விட்டனர். இதற்கு தைரியம் கொடுத்ததே எடப்பாடி தான். இதற்கு பழிதீர்க்கும் விதமாக, தாங்கள் ஆண்டாண்டு காலமாக பலன் அனுபவித்து வந்த கட்சியையை கவிழ்க்க சிலரது தூண்டுதலின் செயல்பட்ட டிடிவி தினகரனால் 18 எம்எல்ஏக்களை மட்டுமே பிரிக்கமுடிந்தது.

இதுபோன்ற போராட்டங்களால் இந்த ஆட்சி இன்றோ நாளையோ கவிழ்ந்துவிடும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. சிலர், இன்னும் 3 மாதத்தில் கவிழ்ந்து விடும் 6 மாதத்தில் கவிழ்ந்து விடும் என ஆரூடம் கூற ஆரம்பித்தனர். 

 பின்னர் பதவி பறிபோனதால் நடைபெற்ற இடைத்தேர்தலில், தேவையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy). இது டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனவே, எந்த வியூகமும் எடுபடாததால், சசிகலா வந்த பிறகுதான் தனக்குவாழ்வு என நினைத்த டிடிவி தினகரன், அவரது விடுதலைக்காக காத்திருந்தார்.

சசிகலா சிறையில் இருந்து வந்ததும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்கள் உட்பட பலரும்  சசிகலாவிடம் சரணடைந்து விடுவார்கள் என கூறப்பட்டு வந்தது. இதற்கேற்ப சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வரும்போது, உலகமே வியந்து பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என வரவேற்பு பிரமாண்டமாக நடந்தது.

 ஆனால், சசிகலா வருவதற்கு முன்பே தான்தான் அதிமுக முதல்வர் என முடிவு செய்து நிச்சயம் செய்து அறிவித்து விட்டார் எடப்பாடியார். அதோடு, ஒட்டுமொத்த கட்சிநிர்வாகிகளும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரே அவரது வாயாலேயே எடப்பாடியார்தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கும் வகையில் கட்சியினரை ஒன்றுபட்டு நிற்க வைத்ததன் மூலம் தனது சாணக்கியத்தனத்தையும் ஆளுமை திறனையும் எடப்பாடியார் நிரூபித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ALSO READ | TN Election 2021: தமிழக தேர்தல் பிரச்சார களத்தில், பிரதமர் மோடி, அமித்ஷா

 இதன்மூலம், சசிகலா என்ட்ரிக்கான கதவை நிரந்தரமாக மூடிவிட்டார் எடப்பாடி. அதுமட்டுமின்றி ஜெயலலிதா சமாதியிலோ, வீட்டிலோ சசிகலா வந்து ஏற்கனவே சமாதியில் சத்தியம் செய்தது போல  விட்டுவிடக்கூடாது என்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும்செய்து விட்டார் எடப்பாடியார். அதுமட்டுமின்றி, அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என புகார் கொடுத்து, காவல் துறை அதிகாரி மூலமாக எச்சரிக்கையும் விடுத்து கட்சியில் எந்த வகையிலும் இடமில்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டார். இதனால் ஒவ்வொரு காராக இறங்கி ஏறி வரும்நிலைக்கு ஆளாகிவிட்டார் சசிகலா.  சசிகலா விடுதலையாகி வெளியில் வருவதற்கு முன்பே, அவரது ஆதரவாளர்கள் குரல்களே ஒலிக்கவில்லை.

அந்த அளவுக்கு அடிமையாக இருக்கப்போகிறீர்களா அல்லது சுதந்திரமாக இருக்கப்போகிறீர்களா எனக்கேட்டு, ஆளுமையோடு கட்சியினரிடம் அவர் நிகழ்த்திய உரையை அடுத்து, கட்சியினர் அனைவரும் எடப்பாடியாருடனேயே இருக்க முடிவு செய்து விட்டனர். இதனால்தான் சசிகலா குறித்த எந்த கேள்விக்கும், விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமலேயே இருந்து விட்டனர்.

இது, தான் வெளியில் வந்ததும் பதவியையும் கட்சியையும் தன்னிடம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்த சசிகலாவுக்கு மிகுந்த மன வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளித்து விட்டது. தன்னிடம் ஒரு கட்சி நிர்வாகி கூட வரவில்லை என்ற நிதர்சனம் சசிகலாவுக்கு தெரிந்து விட்டது. உடல் நிலை சரியில்லை என்று மாற்றுக்கட்சியினர் விசாரிக்க வந்தார்களே தவிர வேறு எதுவுமே கூறவில்லை.

அதோடு, தேர்தலில் கூட்டணி கட்சியினருக்கு சீட் ஒதுக்கியது முதல் அனைத்திலும் சிறந்த ஆளுமையுடனும், ராஜ தந்திரத்துடனும் செயல்பட்டார். சசிகலா - டிடிவி ஆகியோரையும் ஒருங்கிணைந்து கூட்டணியாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற டெல்லி தலைமையின் நிர்பந்தத்தையும் புறந்தள்ளிவிட்டார்.  இதன்மூலம் மிகச்சி்றந்த இக்கால ராஜதந்திரி மற்றும் அரசியல் சாணக்கியன் என்ற பெயரை எடப்பாடியார் நிரூபித்து விட்டார்.

ALSO READ | அதிமுக என்றால் ''ISI'', திமுக என்றால் டூப்ளிகேட் '': எடப்பாடி பழனிசாமி

அறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வர் பதவி யாருக்கு? கட்சிப் பொறுப்பு யாருக்கு என்ற கேள்விகளும் குழப்பங்களும் எழுந்த நிலையில், மிகத் திறமையாகவும் சாதுர்யமாகவும் சாணக்கியத்தனம் ஆகவும் செயல்பட்டு முதல்வர் பொறுப்பை ஏற்ற கலைஞர் மு.கருணாநிதி, கட்சியின் ஒட்டு மொத்த தொண்டர்கள் தன் பக்கம் ஈர்த்து அரவணைத்துக் கொண்டார். அதேபோலத்தான் எடப்பாடி யாரும் தனது சாணக்கிய திறமையை செயல்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்ல, என் குடும்பத்தின் பிடியில் கட்சி போய்விடக்கூடாது என்று ஜெயலலிதா அவர்கள் சசிகலாவை ஒதுக்கி வைத்தும் இறுதிவரை அதில் உறுதியாக இருக்க முடியவில்லை. ஆனால் எடப்பாடியார் சசிகலாவுக்கு கதவுகளை அடைத்து விட்டார். 

மேலும், குடும்ப ஆட்சி என்று திமுக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தகைய குடும்ப ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருந்து ஜெயலலிதா அவர்களின் உறுதி மற்றும் கருணாநிதி அவர்களின் சாணக்கியத்தனம் ஆகிய இரண்டையும் ஒருங்கே பெற்ற தலைவராக பரிணமித்து உள்ளார்.

இந்த அளவில் பாதியாவது திறமை இருந்திருந்தால் சாணக்கியன் என்று பெயர் பெற்ற கலைஞர் மு.கருணாநிதியின் மகனான முக.ஸ்டாலின், அதிமுக கட்சி உடைந்தபோதே கோட்டை விட்டிருக்க மாட்டார். ஓபிஎஸ் பிரிந்த போதும் ஆட்சியை பிடிக்க முயன்றிருப்பார். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த பிறகு திமுகவினர் அராஜக வழியில் பேரவையில் அமளி செய்து ஆட்சியைக் கவிழ்த்து கைப்பற்ற முயன்றனர். இதையும் முறியடித்து சாதித்து விட்ட எடப்பாடியார், தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் சிறந்த அரசியல் ராஜதந்திரி என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டுதான் வருகிறார்.

ALSO READ | டிரெண்டிங் ஆகும் #FreeTNTemples; 100 + வீடியோக்களை ட்வீட் செய்த சத்குரு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News