தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோயில் காணிக்கை நகைகளை உருக்குவது ஒரு புரட்சிகரமான திட்டம் என்றும் இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் இப்படி செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.
சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காஞ்சிபுர ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்டு இடம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு (Sekar Babu), சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான 49 கிரவுண்டு இடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த இடத்தில் இருக்கும் பழம்பெரும் கட்டடத்தை வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆய்வு மேற்கொள்ள கட்டிட அமைப்பாளர் கொண்ட தனியார் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த குழு தேவையான ஆய்வை நடத்தும் என்றும், அதன் பிறகு, இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த இடத்தை ஆக்கிரமித்தவர்கள் ரூ.12 கோடி வாடகை செலுத்த வேண்டியுள்ளது, அதனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 40 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 1000 கோடி மதிப்பிற்கு மேலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.
ALSO READ: கர்ப்பிணியை கவனிக்காமல் பிறந்தநாள் கொண்டாடிய நர்சுகள் : இறந்த குழந்தை
சுப்பிரமணிய சுவாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ள அதிகாரத்தின் படியும் அர்ச்சகர்களை நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இதற்கு இணை ஆணையர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் கூறினார்.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு (K Annamalai) பதலளிக்கும் விதமாக, “ கொரோனாவை கடுப்படுத்தவே வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டுள்ளது. கோயில்களை திறப்பதில் பாரபட்சம் எதுவும் இல்லை. ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இந்து கோயில்கள் மட்டும் மூடப்பட்டுள்ளது என்ற தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது” என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
கோயில்களில் நகைகளை தங்க கட்டிகளாக மாற்ற பாஜக (BJP) எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, சமயபுரம் திருக்கோயிலில் மூட்டை மூட்டையாக காணிக்கை நகைகளை கட்டி வைத்திருந்தனர் என்று தெரிவித்தார். “கடந்த 10 ஆண்டுகளாக நகைகளை கட்டி வைத்திருந்ததாக கோயிலில் கூறப்பட்டது. இதை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். பயன்பாட்டிற்கு இல்லாத, உடைந்த நகைகளை மட்டுமே உருக்க திட்டமிட்டுள்ளோம். மன்னர்கள், ஜமீன்தார்கள், அறங்காவலர்கள் கொடுத்த நகைகளை உருக்க முயற்சிக்கவில்லை.1000 ஆண்டுகள் பழமையான நகைகள் அப்படியே உள்ளன” என்று தெரிவித்தார். மேலும், ஓய்வு பெற்ற நீதிபதிகளின் முன்னிலையில் நகைகளை கணக்கிடும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூரினார்.
நகைகளை உருக்கும் செயல்முறை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும். ஒன்றிய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள நிறுவனத்திடம் அளித்து 24 கேரட் தங்க கட்டிகளாக பெறப்பட்டு, வைப்பு வங்கியில் வைத்து பெரிய அளவிலான வட்டி தொகை பெறப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையிலான திட்டமே தவிர, மண்ணில் தூசி அளவு கூட இதில் தவறு நடக்காது என அய்யப்பன் மீது ஆணையிட்டு கூறுகிறேன் என்றும் அவர் உறுதியளித்தார். ஆகையால் இதை யாரும் தேவை இல்லாமல் விமர்சிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ்நாட்டின் தஞ்சை நடராசர் சிலை தமிழகத்துக்கு கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அதைப்பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி முடிவு செய்வார்கள் என்றார்.
சென்னை பூந்தமல்லி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் மீட்கப்பட்ட கிரவுண்டுகளைத் தவிர, கோயிலுக்கு சொந்தமான 141 கிரவுண்ட் நிலத்தை அறநிலையத்துறை மீட்டு வருகிறது. இதற்கு முன்னர் 32 கிரவுண்ட் மீட்கப்பட்டது. இதே இடத்தில் இன்று 44 கிரவுண்ட் இடம் மீட்கப்பட உள்ளது.
அரசு மதிப்பீட்டின் படி, மொத்தமாக இந்த இடத்தின் மதிப்பு சுமார் 1000 கோடி மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதே இடத்தில் செயல்பட்டு வரும் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து நடத்த முடிவு செய்துள்ளது.
ALSO READ: 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளி திறக்கப்படும்: தமிழக அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR