45 வயதாகும் கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர், சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக இருந்த போது வங்கி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை 40 மணி நேரத்திற்குள் கைது செய்தார். இவருக்கு சமீபத்தில் பதவி உயர்வு கிடைத்துள்ள நேரத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியாமல் காவல் துறையினர் திக்கு முக்காடி போயுள்ளனர்.
விஜயகுமாரின் தற்கொலை:
தேனி மாவட்டம் போடி என்ற பகுதி அருகே அணைக்கரை பட்டியைச் சேர்ந்தவர் செல்லையா. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவருக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியராக இருக்கும் ராசாத்திக்கும் பிறந்த மகன், விஜயகுமார். 45 வயதாகும் விஜயகுமார் தற்போது கோவை சரக டிஐஜி யாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து கீதா வாணி என்ற மனைவியும் நந்திதா என்ற மகளும் உள்ளனர். இவருக்கு கடந்த ஜனவரி மாதம்தான் பதவி உயர்வு கிடைத்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் விஜயகுமார். இவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் புலப்படவில்லை. இவரைப்போல பல காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டு உயிரை விட்டுள்ளனர். அவர்களின் மரணங்களுக்கான சரியான விடையும் இதுவரை கிடைக்கவில்லை.
மேலும் படிக்க | பைக் மீது கார் மோதி விபத்து: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!
காவல் துறை அதிகாரி கவுதமன்:
கடந்த 2021ஆம் ஆண்டு பல காவல் துறை அதிகாரிகளின் தற்கொலைகள் தமிழகத்தையே திரும்பி பாக்க வைத்தன. அப்படி தற்கொலை செய்து கொண்டவர்களுள் ஒருவர், கவுதமன், இவர், கடந்த 2021ஆம் ஆண்டில் ஒரு நாள் பணி முடிந்து வீடு திரும்பினார். தனது மனைவியிடம் காபி கேட்ட அவர், அவர் அதை எடுத்துக்கொண்டு வருவதற்குள் துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர், தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்புதான் விருப்ப ஓய்வு கோரி கடிதம் எழுதியிருந்தார். இவரது தற்கொலைக்கு காரணமாக கடன் நெருக்கடி, மருத்துவ செலவு என பல கூறப்பட்டன.
காவல் அதிகாரி அஜித்குமார்:
இளம் காவலர்களை பலரையும் தமிழக காவல் துறை தற்கொலைக்கு பலி கொடுத்துள்ளது. அப்படி இளம் வயதிலேயே உயிரை மாய்த்துக்கொண்ட காவல் அதிகாரி, அஜித்குமார். சேவூர் பகுதியில் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். பணி முடிந்து திருமிய இவர், ஒரு நாள் துணியால் தூக்கிட்டு தான் தங்கியிருந்த குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான சரியான காரணம் காவல் துறையினருக்கு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இவர் பணியில் சேர்ந்து நான்கு ஆண்டுகளே ஆகியிருந்தன.
டி.எஸ்.பி விஷ்ணுபிரியா:
2015ஆம் ஆண்டு நடைப்பெற்ற காவலர்களின் மர்மமான தற்கொலை சம்பவங்களுள் மிகவும் கவனம் பெற்றது டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் உயிரிழப்பு. பெண் காவல் அதிகாரியாக பணியில் இருந்த இவர், ஒரு நாள் தூக்கிட்ட நிலையில் பிணமாக தான் தங்கியிருந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்டார். இவர் தமிழகத்தையே உலுக்கிய கோகுல் ராஜ் கொலை வழக்கை அந்த சமயத்தில் விசாரித்து கொண்டிருந்தார். விஷ்ணுப்பிரியாவின் உயிரிழப்பிற்கு பின்னால் சாதிய அடிபடையிலான காரணங்களும், பெண் அடக்குமுறை காரணங்களும் சொல்லப்பட்டது.
தொடரும் தற்கொலைகள்-தீர்வு எப்போது..?
மேற்கூறியதை விட, இன்னும் பல காவலர்களின் தற்கொலைகள் அரங்கேறி வருகின்றன. இதை தடுப்பதற்காக தமிழக காவல்துறை பல்வேறு முயற்சிகள் எடுத்தும் நிலை மாறாமல் பயணற்று போயுள்ளன. வருடத்திற்கு ஒன்றிரண்டு என்றிருந்த காவல்துறையினரின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது. இதைத்தவிர்க்க காவல் துறையினருக்கு மன அழுத்தம் தொடர்பான புரிதல்களை கற்பிக்கும் வகையில், கவுன்சிலிங் பயிற்சிகளை ஊக்குவிக்க வேண்டும், அதிகாரிகளை நடத்தும் முறை மாற வேண்டும் என்பது போன்றவற்றை தீர்வுகளாக தருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி..?
உங்களுக்கு தற்கொலை எண்ணம் இருந்தால் இது உங்களுக்கானது. நீங்கள் மனதிற்குள் பூட்டி வைத்திருக்கும் எதிர்மறையான எண்ணங்கள் உங்களை இவ்வாறான தவறான வழிகளுக்கு எடுத்துச்செல்கின்றன. எத்தனை பெரிய பிரச்சனையாக இருந்தாலும் நீங்கள் அதில் தனியாக இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களின் நிலை அறிந்து உங்களுக்கு உதவி செய்ய இந்த உலகில் பலர் உள்ளனர். நீங்கள் செய்ய வேண்டியது, அவர்களிடம் பேசுவது மட்டுமே. தற்கொலை எண்ணங்களை தவிர்க்க பல உதவி எண்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம். ‘இதுவும் கடந்து போகும்’ என்பதை மனதில் வைத்துகொள்ளுங்கள்.
மேலும் படிக்க | பதவி உயர்வு.. 40 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது.. யார் இந்த டிஐஜி விஜயகுமார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ