மகாத்மா காந்தியின் உருவத்தைப் போன்று செய்து, அதைத் துப்பாக்கியால் சுட்டவர்கள் தேச பக்தர்களாக இருக்கின்றார்கள். ஆனால் நான் என்ன தேசத்துரோகம் செய்தேன்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று பகல் 12 மணிக்கு, திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியது,
இந்த நிலையில், என் மீது 124எ பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தண்டனை வராது என்று நான் நம்பியது உண்மை. காரணம், இந்திய விடுதலைக்கு முன்பு, மகாத்மா காந்தி அவர்களும், பாலகங்காதர திலகர் அவர்களும் இதே பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்டார்கள். திலகர் இரண்டு முறை தண்டிக்கப்பட்டு, இரண்டாவது முறை ஆறு ஆண்டுகள், பர்மாவில் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
பண்டித ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட அத்தனைத் தலைவர்களும், பிரித்தானிய ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட இந்தக் கொடூரமான சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று கருத்துச் சொன்னார்கள். சுதந்தரத்திற்குப் பிறகும்கூட ஒரு கட்டத்தில் நேரு அவர்கள் சொன்னார்கள். ஆனால் நீக்கப்படவில்லை.
நான் என்ன தேசத் துரோகம் செய்தேன்?
மகாத்மா காந்தியின் உருவத்தைப் போன்று செய்து, அதைத் துப்பாக்கியால் சுட்டவர்கள், அந்த உருவத்தைக் காலில் போட்டு மிதித்துத் தீவை வைத்துக் கொளுத்தியவர்கள், தேச பக்தர்களாக இருக்கின்றார்கள்.
காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக கோட்சேவுக்கு ஊருக்கு ஊர் சிலை எழுப்ப வேண்டும் என்று சொல்பவர்கள் தேச பக்தர்களாக இருக்கின்றார்கள்.
இந்திய விடுதலைக்குப் பிறகு, இன்றுவரை, இந்தியாவில் இந்தச் சட்டப் பிரிவின் கீழ் யாரும் தண்டிக்கப்படவில்லை. பல பேர் மீது வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகள் எல்லாம் விடுதலை ஆயிற்று. ஆனால் என் மீதான வழக்கில், 5ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட்ட தீர்ப்பில், எனக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பின்னர், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். அதேபோல, விடுதலைக்குப் பிறகு, தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்பட்டவனாகவும் நான் இருக்கிறேன்.
நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.