பெரியார் பல்கலைக்கழகத்தில் விதிமீறல் - விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பெரியார் பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டு விதிமீறல் பற்றி விசாரணை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 18, 2022, 03:52 PM IST
  • பெரியார் பல்கலைக்கழகத்தில் விதிகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு
  • பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்
  • விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ராமதாஸ் வலியுறுத்தல்
பெரியார் பல்கலைக்கழகத்தில் விதிமீறல் - விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல் title=

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குனர், நூலகர் ஆகிய பணிகளுக்கான ஆள் தேர்வில் இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமூகநீதிக்காக போராடிய தந்தை பெரியாரின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே இட ஒதுக்கீட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுவது சமூகநீதி குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரியார் பல்கலக்கழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக நூலகர், உடற்கல்வி இயக்குனர் ஆகிய இரு பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் வரும் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. பல ஆண்டுகளாக காலியாக உள்ள இந்த பணியிடங்களை நிரப்புவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், இந்த இரு பணிகளுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படவில்லை. பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு அப்பட்டமாக மீறப்படுவதை எளிதாக கடந்து செல்ல முடியாது.

பெரியார் பல்கலைக்கழகம் 1998-ஆம் ஆண்டில் தான் தொடங்கப்பட்டது. அப்பல்கலைக்கழகத்திற்கு 2004-ஆம் ஆண்டில் தான் நூலகரும், உடற்கல்வி இயக்குனரும் முதன்முறையாக நியமிக்கப்பட்டனர். அப்போது இந்த இரு பணிகளும் தமிழ்நாடு அரசின் 200 புள்ளி ரோஸ்டர் விதியை பயன்படுத்தி, பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டன. அது தான் சரியான நடைமுறை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.பல்கலைக்கழக நூலகர் பணியும், உடற்கல்வி இயக்குனர் பணியும் இரண்டாவது முறையாக நிரப்பப்படும் போது, 200 புள்ளி ரோஸ்டர் விதிப்படி இரு பணிகளும் பட்டியலினம் - அருந்ததியருக்கு ஒதுக்கப் பட வேண்டும். மூன்றாவது முறையாக இந்த இரு பணிகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டு இரு பணியிடங்களும் மீண்டும் பொதுப்போட்டி பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது சமூக அநீதி.

மேலும் படிக்க | ஸ்டாலின் எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டார் - செல்லூர் ராஜூ பேச்சு!

பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்த விதி மீறலால், பட்டியலின அருந்ததியருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, இந்த இரு பணியிடங்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்படுவதற்கு இன்னும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டும். சிலரின் சுயநலத்திற்காக மற்றவர்களுக்கான சமூகநீதி பறிக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது.

தமிழக அரசின் 200 புள்ளி ரோஸ்டர் விதிப்படி, மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்படும் போது, முதல் பணியிடம் பொதுப்போட்டி பிரிவுக்கும், இரண்டாவது பணியிடம் பட்டியல் வகுப்பு (அருந்ததியர்), மூன்றாவது பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, நான்காவது பணியிடம் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, ஐந்தாவது இடம் பொதுப்போட்டி பிரிவு, ஆறாவது இடம் பட்டியலினம், 15-ஆவது இடம் இஸ்லாமியர்கள், 50-ஆவது இடம் பழங்குடியினருக்கு வழங்கப்பட வேண்டும். 2009-ஆம் ஆண்டில் அருந்ததியர் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு, ரோஸ்டர் வரிசையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

சில பல்கலைக்கழகங்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ரோஸ்டர் வரிசையை மீண்டும் முதலில் இருந்து பின்பற்றுவதாகக் கூறுகின்றன. பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர், பல்கலைக்கழக நூலகர் ஆகிய பணிகளை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே பட்டியலின அருந்ததியருக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் பொதுப்போட்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை ஒதுக்கிவிட முடியாது.

பல்கலைக்கழக நூலகர், உடற்கல்வி இயக்குனர் ஆகிய பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஒரு பணி நியமனத்திற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டால், அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்து பணி ஆணை வழங்கப்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. ஆனால், நூலகர், உடற்கல்வி இயக்குனர் பணிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு 9 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. இப்போது அவசரம், அவசரமாக வரும் 25-ஆம் தேதி, அதுவும் ஞாயிற்றுக் கிழமையில் நேர்காணலை நடத்தி, அதற்கு அடுத்த நாளே சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டி ஒப்புதல் பெறவும் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருப்பது இந்த குற்றச்சாட்டுகளை உறுதி செய்கிறது.

தமிழகத்தில் சமூகநீதிக்காக போராடியவர்களில் முதன்மையானவர் தந்தை பெரியார். அவரது பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் சமூகநீதி சூறையாடப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. இட ஒதுக்கீட்டு விதிகளுக்கு எதிராக நடைபெறவிருக்கும் பெரியார் பல்கலைக்கழகத்தின் நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணிகளுக்கான நேர்காணலை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். முறையான இட ஒதுக்கீட்டின்படி நியாயமான முறையில் இந்த பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News