இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் இப்போது சென்னையின் மாவட்ட தேர்தல் பிரச்சார பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக வாக்களிக்கவுள்ள இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் பணியில் இவர் ஈடுபடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்குக் கிடைத்த அபாரமான துவக்கத்தால் வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) தற்போது இளைய தலைமுறையிடம் பிரபலமாகியுள்ளார். அவரது இந்த புகழை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தி, அதிக மக்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துவர சென்னை மாநகராட்சி அவரை இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
சுந்தர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு (Australia) எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். மேலும் அங்கு இந்தியா பெற்ற அபார வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் முதல் இன்னிங்சில் 89 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் பேட்டிங் செய்ய வந்த சுந்தர் 62 ரன்கள் எடுத்து ஷார்துல் தாகூருடன் நின்று விளையாடி, தனது அணியை சிக்கலில் இருந்து வெளியேற்றினார்.
இரண்டாவது இன்னிங்சில், இறுதி நாளில் இந்தியா வெற்றி பெற 328 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அவர் 29 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். பாட் கம்மின்ஸின் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார். மூன்று விக்கெட்டுகள் மிச்சமிருந்த நிலையில் இலக்கை அடைந்த இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
"சுந்தர் நாடு திரும்பியவுடன் அவருக்கு பல பணிகள் இருந்திருக்கும். இருப்பினும், நாங்கள் அவரை இந்த பணிக்காக அணுகியவுடன், அவர் இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்தார். நகரத்தில் உள்ள இளைஞர்களுடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய ஒருவர் இந்த பணிக்கு சரியாக இருப்பார் என நாங்கள் நினைத்தோம். சுந்தர் இதற்கு ஏற்றவராக இருப்பார் என எங்களுக்குத் தோன்றியது” என்று சென்னை கார்ப்பரேஷனின் (Chennai Corporation) துணை ஆணையர் மேகநாத் ரெட்டி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ALSO READ: Watch: Warner முதல் சின்னப்பம்பட்டி வரை, வாழ்த்து மழையில் நனையும் T Natarajan
இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி-20 அணியின் ஒரு பகுதியாக இருந்த சுந்தர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை ஆடியதில்லை. அதில் அவர் ஒரு வலைப் பந்து வீச்சாளராகவே இருந்தார். ஆனால், இந்திய அணியில் பல வீரர்கள் காயப்பட்டு ஆட முடியாமல் போனதால், அவர் நான்காவது டெஸ்டில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான கிட் கூட இல்லை என்பதுதான் உண்மை.
“டெஸ்ட் போட்டி தொடங்கிய பின்னரே சுந்தருக்கு ஒரு வெள்ளை பேடை வாங்க பயிற்சிக் குழு சென்றது. நாங்கள் பலவற்றை தேர்வு செய்தோம் ஆனால் உயரமாக இருந்த சுந்தருக்கு, அனைத்தும் சிறியவையாக இருந்தன. நாங்கள் ஆஸ்திரேலிய அணியிலிருந்து அவருக்கு பேடை பெற முயன்றோம். ஆனால் COVID-19 காரணமாக அவர்களால் அதை பகிர முடியவில்லை. இறுதியாக, டெஸ்ட் போட்டி தொடங்கிய பிறகு நாங்கள் ஒரு கடைக்குச் செல்ல வேண்டியிருந்தது” என்று ஸ்ரீதர் ஒரு ஊட்க பேட்டியில் தெரிவித்தார்.
வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியாவில் ஆடிய விதம் மிகவும் நன்றாக இருந்தது. ஆகையால், பிப்ரவரி 4 முதல் தொடங்கவிருக்கும் இங்கிலாந்திற்கு (England) எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியாவின் 18 பேர் கொண்ட அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.
சுந்தர் டெஸ்ட் அரங்கில் புதியவராக இருக்கலாம். ஆனால் அவர் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து இந்தியாவுக்காக ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 26 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது ஒரே ஒருநாள் போட்டியில், ஆல்ரவுண்டரான சுந்தர் ஒரு விக்கெட்டை எடுத்தார். டி 20 போட்டிகளில், அவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR