சென்னை: ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என திட்டவட்டமாக அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் சசிகலா அணி அதிமுக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று அதிமுக ஆட்சிமன்றக் குழு இன்று அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதையடுத்து ஆர்கேநகர் தொகுதி காலியாக இருந்தது.
கடந்த 3 மாதமாக காலியாக இருந்த இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆர்கேநகர் இடைத்தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியது. அதிமுக இரண்டாக பிளவுபட்டிருப்பதால் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் தங்களது வேட்பாளரை அறிவிக்க தயாராகி வரும் வேளையில், அதிமுகவின் சசிகலா அணியினர் அவர்களது வேட்பாளராக தேர்ந்தெடுக்க சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று கூடியது.
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் கூடியுள்ள ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்மகன் உசேன், பா.வளர்மதி, வேணு கோபால், ஜஸ்டின் செல்வராஜ் ஆகிய ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் செங்கோட்டையன் இதனை செய்தியாளர்களிடம் அறிவித்தார். இதனையடுத்து ஆர்கேநகரில் டிடிவி தினகரன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
மேலும் மக்கள் நலக்கூட்டணி, வைகோ, விஜயகாந்த், பாஜக, காங்கிரஸுக்கு ஆதரவளிக்க தினகரன் அழைப்பு. ஆர்.கே. நகரில் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். ஆர்.கே நகர் தேர்தலுக்குப் பின் ஓபிஎஸ் முடங்கிப் போவார். திமுகதான் எங்களின் ஒரே எதிரி. முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்பட மாட்டேன். நான் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறினார்.