தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்த ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது,
‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் 09. 05. 2022 திங்கட்கிழமை அன்று “மாணவர்கள் வகுப்பறைகளில் ஒழுங்கீனமாக நடந்துக்கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ; சான்றிதழ்களில் காரணம் குறிப்பிட்டு பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்” என்று நீங்கள் குறிப்பிட்டதாக செய்திகளில் கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
பள்ளிக்கல்வித் துறையில் எண்ணற்ற புதுமைகளை தாங்கள் அமைச்சராக செயல்படும் அரசு கொண்டு வந்திருக்கிறது. ‘இல்லம் தேடிக் கல்வி’, மக்கள் பங்கேற்புடன் பள்ளி மேலாண்மைக் குழு, மாநிலக் கல்விக் கொள்கை, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் மேற்கல்வி செலவை அரசே ஏற்றல், ‘நான் முதல்வன் திட்டம்’, ‘நம் பள்ளி நம் பெருமை’ என்று உங்கள் தலைமையில் நிகழ்ந்த பல மாற்றங்களைக் கண்டு மகிழ்ந்தோம். பள்ளிக் கல்வித் துறையின் இத்தகைய முயற்சிகளில் இணைந்து செயல்பட்டோம்.
மேலும் படிக்க | மாணவிகளுக்கு ரூ.1000: திமுக அரசு அதிரடி..!
கட்டாய உழைப்பில் சட்ட விரோதமாக சிக்கியிருக்கும் குழந்தைகள் (குழந்தை தொழிலாளர்கள்), குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்படுதல், குழந்தைகள் மீதான வன்முறைகள் ஒழிக்கப்பட்ட நிலை உள்ளிட்ட மாற்றங்கள் இத்தகைய முயற்சிகளால் உருவாகி, வாய்ப்பு மறுக்கப்பட்ட, ஏழை எளிய குழந்தைகளின் வாழ்வில் மாற்றங்கள் நிகழும். வசதி படைத்தோரின் குழந்தைகளுக்கே நல்ல கல்வி கிடைக்கும் என்ற பாகுபாடு களையப்பட்டு ஏழை பிள்ளைகளுக்கும் அரசுப் பள்ளிகளில் நல்ல கல்வி கிடைக்கும் என்றும் கனவு கண்டோம். இந்தக் கனவைச் சிதைக்கும் வகையில் தங்களது அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மாணவர்கள் வன்முறையில் இறங்குவதும், ஆசிரியர்களிடம் கண்ணியக் குறைவாக நடந்துக்கொள்வதும் அதனைக் காட்சிப்படுத்தி சமூக ஊடகங்களில் பகிர்வதும் வேதனையான நிகழ்வுகள் மட்டுமல்ல கண்டிப்பாக களையப்படவேண்டிய ஒன்றும் கூட. ஆனால் அவர்களை பள்ளியை விட்டு நீக்குவதும் மாற்றுச் சான்றிதழில் பதிவு செய்வோம் என்பதும் ... ஏற்கனவே வழிதவறிய மாணவனை “இனி வாழ்க்கையில் நீ எங்கேயும் போய் பிழைக்க முடியாமல் செய்து விடுகிறேன் பார்” என்பது போல் இருக்கிறது.
இன்னமும் பல அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இல்லை. ஒரே ஆசிரியர் பல வகுப்புகளை கவனிக்க வேண்டும் என்றால்... நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்கான சூழல் குறைவாகத்தானே இருக்கிறது?
நீதி மன்றங்கள் பல முறை சுட்டிக்காட்டிய பின்னும், பள்ளிகளில் பிரச்சனைக்குரிய சூழலில் உள்ள குழந்தைகளுக்கு வழிக்காட்ட தகுதியும் அனுபவமும் உள்ள மன நல ஆலோசகர்கள் நியமிக்கப்படவில்லை.
பல பள்ளிகளில் கட்டிடங்கள் பாதுகாப்பாக இல்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
மேலும், பள்ளிகளுக்கு அருகில் மாணவர்களுக்கு மது, புகையிலை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்கின்றன.
மாணவப் பருவத்தினர் வன்முறையில் ஈடுபடுவதை ஹீரோயிசமாக காட்டி, அதனை “கெத்து” என கிளர்ச்சி எழுப்பும் ஊடகங்கள். இரண்டாண்டு கால பொதுமுடக்கத்தில் சமூகமயமாதலுக்கு வாய்ப்பில்லாமல், கட்டுப்பாடு இல்லாமல், சரியான வழிகாட்டல் இல்லாமல் இருந்த மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வந்திருக்கின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் இடையில் உருவாகி உள்ள இடைவெளி உள்ளிட்ட புதிய பிரச்சனைகளும் ஏற்கனவே உள்ள எண்ணற்ற பிரச்சனைகளும் தொடர்கின்றன.
சிறைவாசிகளையே அரவணைத்துத்தான் திருத்த வேண்டும் என்ற விவாதம் உலகளாவிய அளவில் நடைபெறுகிற இந்தக் காலகட்டத்தில், வாழ்வின் ஆரம்பக் கட்டமான பதின்மப் பருவத்தில் இருக்கின்ற மாணவர்களை, தவறு செய்கிறார்கள் என்பதற்காக பள்ளியில் இருந்து நீக்கிவிட்டால் திருந்தி விடுவார்களா...? அவர்களை நம்மோடு வைத்து அரவணைத்து சரி செய்யாமல் வெளியில் விரட்டுவது இச்சமூகத்திற்குத் தானே கேடு. இதையா நாம் விரும்புகிறோம் அமைச்சர் அவர்களே?!.
பத்து வருடம் நம்மிடம் படித்த மாணவர் இத்தனை ஆண்டுகள் நம்மிடமிருந்து நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளாமல் போனதற்கு என்ன காரணம் என ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்பட்டதா? பள்ளியில் இருந்து வெளியேற்றி மாற்றுச் சான்றிதழில் ஒழுங்கீனம் என குறிப்பிட்டு விட்டால் குழந்தைகள் திருந்தி விடுவார்கள், நல்லொழுக்கத்தை கற்றுக்கொள்வார்கள் என்ற மனித வள மேம்பாட்டு யுக்தி (Human Resources Development Strategy) யை முன்வைத்த ஆய்வு ஏதும் உள்ளதா?
நேர்மறை நல்லொழுக்க வழிமுறைகளைக் (Positive Disciplining Strategies) கையாண்டு இதுவரை ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் மாணவர்களின் பங்கேற்போடு (Child Participation) பள்ளியை ஒழுங்கமைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் எத்தனை என்று நாம் நம்மையே கேட்டு இருக்கிறோமா?
இது நாள் வரை நாம் அனைவரையும், குறிப்பாக புறந்தள்ளப்பட்ட குழந்தைகளுக்கு உள்ளிணைந்த அணுகுமுறையினை (inclusive approach) கைகொண்டோம். ஆனால் இன்று புறந்தள்ளும் அணுமுறையை (exclusion approach) எடுக்கிறோம். இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது ஏற்கனவே விளிம்பு நிலையில் உள்ள குழந்தைகள் தான். இத்தகைய அணுகுமுறையால் சில தவறான ஆசிரியர்கள் தங்களின் சாதி, மத, வர்க்க, குடும்பப் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள மாணவர்களை ஒரு கருவியாக மாற்றும் அபாயமுண்டு என்பதையும் மறந்துவிடக்கூடாது.
மாணவர்களைக் குற்றவாளிகளாக அனுமானித்து தண்டிப்பதை சிறார் நீதி சட்டம் (Juvenile Justice (Care and Protection for Children) Act 2015 தடை செய்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலில் தமிழ்நாடு பல்வேறு நிலைகளில் முன்னணியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வித் துறையும் கடந்த ஓராண்டாக மிகச் சிறந்த முன்னெடுப்புகளை செய்துள்ளது என்பதை மீண்டும் நாங்கள் நினைவுகூர்கிறோம். அதே வழியில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தப் பயணத்தில் தொடர்ந்து தோள் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மேலும் படிக்க | சாதி பெயரை கூறி அடித்து துன்புறுத்தல் - ஏக்கத்தோடு வந்த நின்ற பள்ளி மாணவர்கள்..!
குழந்தைகளைக் குற்றவாளிகளாக அணுகி அவர்களை சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்காமல், நமது அரவணைக்கும் முயற்சிகள் மூலம் அவர்களை நல்வழிப்படுத்தி, தமிழ்நாட்டின் தன்னிகரில்லா செல்வங்களாக்கிட உங்கள் கரங்களை வலுப்படுத்த நாங்கள் தயார். குழந்தைகள் வாழ்வதற்கான மிகச் சிறப்பான மாநிலமாக தமிழ்நாட்டை மேலும் உயர்த்துவதற்கு நாம் இணைந்து உழைப்போம்.
நன்றி.!’ என்று தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR