அதிவேக இணைய சேவை வழங்க 3,000 செயற்கைகோள்; அமேசான் திட்டம்!

அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க சுமார் 3,000 செயற்கைகோள்களை அனுப்ப அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Updated: Apr 7, 2019, 02:07 PM IST
அதிவேக இணைய சேவை வழங்க 3,000 செயற்கைகோள்; அமேசான் திட்டம்!
Representational Image

அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க சுமார் 3,000 செயற்கைகோள்களை அனுப்ப அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலகின் பல பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ‘புராஜக்ட் குய்பர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்காக 3,236 செயற்கைக்கோள்களை அனுப்பப்பட அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

பூமிக்கு அருகில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் குழுவாக நிலைநிறுத்தப்பட உள்ளன. பூமியிலிருந்து சுமார் 590 கிமீ முதல் 630 கிமீ வரையிலான மண்டல வெளியில் இந்த செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன. இதன் மூலம், குறைவான நேரத்தில் அதிவேக இணையதளத்தை வழங்க முடியும் என அமேசான் தெரிவித்துள்ளது.

மேலும் இணைய சேவை கிடைக்காத உலகின் பல பகுதிகளில் இணைய சேவை வழங்கப்படும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க சந்தை ஒழுங்குமுறை அமைப்பிடம் அமேசான் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் படி இந்த திட்டத்திற்கு ஒரு பில்லியன் டாலர் வரை ஆகலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டம் ஒரு நீண்டகால நோக்குள்ள திட்டம் என்றும், இதுவரை சரிவர இணையவசதி கிடைக்காத பல கோடிக் கணக்கான மக்களுக்கு இணைய வசதியைச் சாத்தியப்படுத்தும் திட்டம் என்றும் அமேசான் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் ஆர்வமுள்ள பிற நிறுவனங்களையும் தங்களுடன் கூட்டு சேர்த்துக்கொள்ள அமேசான் தயாராக உள்ளது. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸுக்குச் சொந்தமாக புளூ ஆரிஜின் என்ற ராக்கெட் நிறுவனம் ஒன்று உள்ளது. எனினும் இந்நிறுவனத்துக்கும் இந்த குய்பர் புராஜக்டுக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரையிலும் எந்த தகவலும் வெயாகவில்லை.

இணைய சேவை வழங்க செயற்கைக்கோள்களை அனுப்பும் திட்டத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், ஒன்வெப், சாஃப்ட்பேங்க், ஏர்பஸ், குவால்கம் உள்ளிட்ட நிறுவனங்களும் முயற்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.