கடல்சார் ஆராய்ச்சிக்காக 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1ஐ என்ற செயற்கைக்கோளை, இஸ்ரோ விண்ணில் இன்று காலை வெற்றிகரமாக செலுத்தியது.
பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு, மற்றும் வான்வெளி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு உதவும் வகையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.
வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று ( ஏப்.12) அதிகாலை 4.04 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தியது.
இது ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்திற்கு இணையான நாவிக் எனப்படும் தொழில்நுட்பத்தை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளின் மொத்த எடை 1,425 கிலோ ஆகும். இதன் ஆயுள் காலம் 10 ஆண்டுகள்.
இந்தியாவின் 43-வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் இதுவாகும். இந்த, செயற்கைக்கோளின் சிக்னல் ரிசீவர்கள் ப்ளூடூத் மூலமாக மீனவர்களின் செல்போன்களுடன் இணைக்கப்படும். இதன்மூலம், கடலில் தாங்கள் இருக்கும் பகுதி, வானிலை எச்சரிக்கைகள் மற்றும் சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள் குறித்த தகவல்களை மீனவர்கள் அறிந்து கொள்ள முடியும்
முன்னதாக 2013-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி சி-22 ராக்கெட் மூலம் 1ஏ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டிருந்த அணுசக்தி கடிகாரம் பழுதானதால் படங்கள் மற்றும் தகவல்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எச் செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி சி-39 ராக்கெட் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதில், வெப்ப தகடுகள் சரியாக வேலை செய்யாததால் செயற்கைகோள் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.