வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசிக்கு தேவையான மூலப்பொருட்கள் வழங்குவதற்கான தடையை நீக்குவது குறித்த கேள்விக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. இந்தியாவின் தேவைகளை அமெரிக்கா புரிந்து கொண்டாலும், தற்போதைக்கு அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியாது என ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, பத்திரிகை செயலாளர் ஜெயின் பாஸ்கி நேரடியாக பதில் அளிக்காமல், இந்தியாவின் தேவைகள் எங்களுக்கு புரிகிறது என்று மட்டும் கூறினார்.
எனினும், கோவிட் -19 (COVID-19) நடவடிக்கைக் குழுவின் மூத்த ஆலோசகரும், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநருமான டாக்டர் அந்தோனி ஃபவுசி, இந்த நேரத்தில் இந்தியாவுக்கு அளிக்க எங்களிடம் எதுவும் இல்லை என்று கூறினார்.
ஆதார் பூனாவாலா இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்
இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலாவின் கோரிக்கை குறித்து டாக்டர் அந்தோணி ஃபவுசியிடம் கேட்கப்பட்டது. இந்தியா தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில், மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான விதிகளை தளர்த்துமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பூனாவாலா கேட்டிருந்தார். இதற்கு டாக்டர் ஃபவுசி, 'இந்த நேரத்தில் பூனாவாலாவின் கோரிக்கையை நிறைவேற்ற எங்களால் முடியாது' என்று கூறினார். தனது குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையின் அடிப்படையில் பூனாவாலாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிகின்றன.
சந்து தொடர்ந்து இந்த பிரச்சினையை எழுப்புகிறார்
அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து இந்த பிரச்சினையை அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து எழுப்பி வருகிறார். இந்தியாவின் நிலைமை குறித்து அமெரிக்க நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய அவர், மூலப்பொருட்களை விரைவில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், தடுப்பூசி (Vaccine) தொடர்பான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நிறுவனங்கள் முதலில் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே, மற்ற நாடுகளுக்கு மூலப்பொருட்களை கொடுப்பது பற்றி யோசிக்கத் துவங்கும் என்றும் வட்டாரங்கள் இந்திய செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தன. அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்புடைய வட்டாரங்களின்படி, விரைவில் பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று பைடன் நிர்வாகம் புதுடில்லிக்கு உறுதியளித்துள்ளது.
பல நாடுகளில் மூலப்பொருட்களின் பற்றாக்குறை
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா நெருக்கடியை அடுத்து பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை அமல்படுத்தினார். இதன்படி, அமெரிக்க நிறுவனங்கள் முதலில் தங்கள் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதன் காரணமாக, நிறுவனங்கள் பிபிஇ கிட்கள் முதல் மருந்துகள் தயாரிப்பது வரை, அனைத்திலும் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கையை கடைபிடிக்கின்றன. அதிபர் ஜோ பைடனும் டிரம்பின் முடிவை நடைமுறையில் வைத்திருக்கிறார். அமெரிக்கா, ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி உற்பத்தியை துரிதப்படுத்தியுள்ளது. ஏனென்றால், அங்கு ஜூலை 4 க்குள் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியா உட்பட பல நாடுகளில் தடுப்பூசிகளைத் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்
கொரோனா தொற்று (Coronavirus) அதிகரித்து வரும் நிலையில், மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்றின் அதிகரித்துவரும் வேகத்தைத் தடுக்க, அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போட அரசாங்கம் விரும்புகிறது. எனவே, தடுப்பூசி உற்பத்தியையும் துரிதப்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் மூலப்பொருட்களின் பற்றாக்குறை அதற்குத் தடையாக இருக்கும். மூலப்பொருட்கள் வழங்குவதற்கான தடையை நீக்குமாறு இந்தியா அமெரிக்காவிடம் கோரியதற்கு இதுவே காரணமாகும்.
ALSO READ: Tamil Nadu Corona Update: தமிழகத்தில் கொரோனாவுக்கு 44 பேர் பலி, பாதிப்பு சுமார் 11000
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான
செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR