அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், யாகிமா நகரில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்குள் இருக்கும் பலசரக்கு கடையில் கணக்காளராக வேலை பார்த்து வந்தவர் விக்ரம் ஜர்யால். இவர் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்றார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் விக்ரம் ஜர்யால் கடையில் இருந்தபோது முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கடைக்குள் நுழைந்து விக்ரம் ஜர்யாலிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கேட்டு உள்ளனர்.
உயிருக்கு பயந்து அவர் தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டார். ஆனாலும் கொள்ளையர்களில் ஒருவன் விக்ரம் ஜர்யாலை துப்பாக்கியால் சுட்டான். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். பின்னர் கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுனர். விக்ரம் ஜர்யாலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் விக்ரம் ஜர்யால் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கொண்டு கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கோர சம்பவத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, இந்த கொலை தொடர்பான விசாரணையில் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.