அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான வட கொரிய தலைவர் கிம்-ன் வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நாளை நடைபெறவுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான வட கொரிய தலைவர் கிம்-ன் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நாளை நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பிற்காக இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூர் வந்துள்ளனர். இந்த பயணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன், கிம் ஜாங்-உன் வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்கின்றார். இருநாட்டு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதன்முறை ஆகும்.
இந்த சந்திப்பின் பேச்சு வார்த்தை முடிவில், கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலவச் செய்தல், அணு ஆயுத ஒழிப்பு ஆகியவை இந்தப் பேச்சின் முக்கிய அம்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் பேச்சுவாத்தையின் மூலம் வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனிடையே, வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்புக்கு முன் சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், டிரம்ப் - கிம் சந்திப்புக்காக சுமார் நூறு கோடி ரூபாய் செலவாகும் என்றும், இந்தச் செலவைச் சிங்கப்பூர் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 1950 - 53 காலகட்டத்தில் நிகழ்ந்த கொரிய போருக்குப் பின், எதிரிகளாக இருந்து வரும் வடகொரியா - அமெரிக்கா அதிபர்கள் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ பேச்சு நடத்தியது இல்லை. பல கட்ட நடவடிக்கைகளுக்குப் பின் வடகொரிய தலைவருடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை பேச்சு நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.