இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் தொல்லையில் சிக்கியுள்ளது. கடன் தொல்லைக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தையின் போது சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) அரசாங்கத்திற்கு 'கடினமான நேரத்தை' அளித்து வருவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். நேதன் போர்ட்டர் தலைமையிலான ஐஎம்எஃப் மிஷன், 7 பில்லியன் அமெரிக்க டாலர் உதவிப் பொதியின் ஒன்பதாவது மறுஆய்வுக்காக நிதி அமைச்சர் இஷாக் டார் தலைமையிலான பாகிஸ்தான் தரப்புடன் ஜனவரி 31 அன்று பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது.
பெஷாவரில் நடைபெற்ற அபெக்ஸ் கமிட்டி கூட்டத்தில் உரையாற்றும் போது பாகிஸ்தான் பிரதமர் தனது கருத்தை தெரிவித்தார். இந்த குழு தீவிரவாதத்தை கையாள்வதற்கான மிக உயர்ந்த மாகாண அமைப்பாகும்.
பாதுகாப்பு நிலைமை குறித்து பேசுகையில், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை எடுத்துரைத்த ஷெரீப், "இந்த நிலைமை முழு தேசத்திற்கும் முன்னால் உள்ளது" என்று கூறினார்.
"நான் பேசும் இந்த வேளையில், ஐஎம்எஃப் தூதுக்குழு இஸ்லாமாபாத்தில் உள்ளது. அவர்கள் நிதியமைச்சர் இஷாக் தர் மற்றும் அவரது குழுவினருக்கு கடினமான, இக்கட்டான சூழலை ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று அவர் கூறினார்.
இந்த கட்டத்தில் உள்ள பொருளாதார சவால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில் உள்ளது. நாடு சந்திக்க வேண்டிய ஐஎம்எஃப் நிபந்தனைகளும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை என்று ஷெரீப் கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது கட்டாயம் என்பதையும் அவர் தெரிவித்தார்.
ஐஎம்எஃப் குழுவுடனான பேச்சுவார்த்தைகள் பற்றிய விவரங்களை அவர் வழங்கவில்லை. ஜனவரி 27 நிலவரப்படி பாகிஸ்தானின் கையிருப்பு 3.09 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மிகக் குறைந்த அளவில் இருந்தது.
கடந்த நிதியாண்டு வார முடிவில், பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு 16.1 சதவீதம் குறைந்து 3.09 பில்லியன் டாலராக உள்ளதாகவும், இது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக பாகிஸ்தானின் மத்திய வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
வெற்றிகரமான ஒன்பதாவது மதிப்பாய்விற்குப் பிறகு ஐஎம்எஃப் 1.1 பில்லியனுக்கும் மேலான அமெரிக்க டாலர்களை வழங்கும். இதன் மூலம், பாகிஸ்தான் நட்பு நாடுகள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து இருதரப்பு கடன்களை பெற முடியும்.
இதற்கிடையில், 2 முதல் 2.5 டிரில்லியன் ரூபாய்களுக்கான இக்கட்டான நிதி இடைவெளியைக் குறைக்க தெளிவான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐஎம்எஃப் மிஷன் தலைவர் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்ததாக டான் செய்தித்தாள் கூறியுள்ளது.
"உங்களுக்கு வேறு வழியில்லை" என்பது முக்கியமான செய்தியாக இருந்தது. இஷாக் தார் மற்றும் குர்ரம் தஸ்கிர் கான் தலைமையிலான நிதி மற்றும் மின் அமைச்சகங்களுடன் ஐஎம்எஃப் மிஷன் உறுப்பினர்கள் பல கூட்டங்களை நடத்தியதாக வட்டாரங்கள் டான் செய்தித்தாளிடம் தெரிவித்தன.
இரு தரப்பினரும் முதல் சுற்றில் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் கொள்கை அளவிலான பேச்சுவார்த்தைகள் முடிவடையும்.
முன்னதாக பாகிஸ்தான் பெட்ரோலியம் விலையை அதிகரிக்க ஒப்புக்கொண்டது. மேலும், சந்தை அடிப்படை மாற்று விகிதத்தையும் அனுமதித்தது. எனினும், இது மிக தாமதமாக எடுக்கப்பட்ட மிக சிறிய அளவிலான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. வருவாயை அதிகரிக்க இன்னும் அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஐஎம்எஃப் விரும்புகிறது.
மேலும் படிக்க | உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்... PoK பகுதியில் தீவிரமடையும் போராட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ