எதிர்வரும் டிசம்பர் 26-ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்வதால் திருப்பதி, சபரிமலை கோயில்களில் நடைசாத்தப்படும் நேர விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன், சந்திரன், குரு, கேது, சனி மற்றும் புதன் ஆகிய ஆறு கிரகங்கள் தனுசு ராசியில் எதிர்வரும் டிசம்பர் 26-ஆம் நாள் சஞ்சரிக்கின்றன. முக்கியமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நிகழ்வு சூரியகிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு அன்றைய தினம் காலை 8.08 மணியிலிருந்து காலை 11.10 மணி வரை நீடிக்கிறது.
பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் இந்த வானியல் விசித்திர நிகழ்வையொட்டி, திருமலை திருப்பதி கோயிலில் 13 மணி நேரம் நடை சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி டிசம்பர் 25 - ஆம் தேதி இரவு 11 மணி முதல் மறுநாள் 26 - ஆம் தேதி பகல் 12 மணி வரை திருப்பதி கோயில் நடை சாத்தப்படும் என்று தெரிகிறது.
மீண்டும் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் கோயிலில் ஆலய சுத்தம் செய்யப்பட்டு, பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்' என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள், இதற்கேற்ப தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதேப்போல் சபரிமலையில் சூரிய கிரகணம் நிகழ்வையொட்டி 4 மணிநேரம் நடை சாத்தப்படுகிறது. கார்த்திகை மாதம் மாலை அணிந்து, ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் சபரிமலைக்குச் செல்வது வழக்கம். குறிப்பாக டிசம்பர் மாதம் 20 -ஆம் தேதிக்கு மேல் இவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்.
இந்நிலையில் வரும் டிசம்பர் 26 -ஆம் தேதி சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை கோயிலின் நடை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை நடை அடைக்கப்பட்டிருக்கும் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.