கேரள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வட்டியூர்காவூ, கோனி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளை ஆளும் இடதுசாரி கூட்டணி கைப்பற்றியது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான இவ்விரு தொகுதிகளும் இடதுசாரி கூட்டணி வசம் சென்றது.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த 21-ஆம் நாள் நடைப்பெற்றது. இத்துடன் பல்வேறு மாநிலங்களில் உள்ள 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், இரண்டு மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.
அந்த வைகியல் கேரளாவின் வட்டியூர்காவூ, கோனி, எர்ணாகுளம், அரூர், மல்லேஸ்வரம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் வட்டியூர்காவூ, கோனி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளை ஆளும் இடதுசாரி கூட்டணியிடம் காங்கிரஸ் பறிகொடுத்தது.
அதேசமயம் இடதுசாரி கூட்டணி வசம் இருந்த அரூர் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது. ஏற்கெனவே வென்ற எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் வென்றுள்ளது. மல்லேஸ்வரம் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் வென்றுள்ளது.
வழக்கமாக வட்டியூர்காவூ காங்கிரஸ் வெல்லும் தொகுதி ஆகும். அதுபோலவே கோனி காங்கிரஸ் அதிகம் செல்வாக்குடன் விளங்கும் தொகுதி ஆகும். இந்த இரண்டு தொகுதிகளையும் தற்போது இடதுசாரி கூட்டணி கைபற்றியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கோட்டையினை இடதுசாரி கைபற்றியுள்ளதாக கருதப்படுகிறது.