வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் துவங்கியது!

வேலூர் மக்களவைத் தொகுதியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று வாக்குப்பதிவு துவங்கியது; காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு 6 மணிக்கு நிறைவடைகிறது!

Updated: Aug 5, 2019, 08:00 AM IST
வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் துவங்கியது!

வேலூர் மக்களவைத் தொகுதியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று வாக்குப்பதிவு துவங்கியது; காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு 6 மணிக்கு நிறைவடைகிறது!

வேலூர் மக்களவைத் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 1,553 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. 7,500 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 3,752 வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,876 கன்ட்ரோல் யூனிட்டுகளும், 1,876 விவிபேட் எந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. வேலூர் தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 7,06,351 பேரும், பெண்கள் வாக்காளர்கள் 7,31,099 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 105 பேரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வேலூர் தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி அருகே 5 கிலோமீட்டர் தூரம் கொண்ட மலை கிராமத்திற்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன. மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 165 என் கொண்ட நெக்னாமலை வாக்குப்பதிவு மையத்திற்கு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுசென்றனர். இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூர் மக்களவை தேர்தலில் அல்லாபுரம் வாக்குச்சாவடியில் ஆட்சியர் சண்முகசுந்தரம் தனதுவாக்கை பதிவு செய்தார்.