பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய போர் விமானி அபிநந்தன், கார்கில் போரில் பிடிப்பட்ட நச்சிகேட்டாவை நினைவு படுத்துவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது.
அபிநந்தன் - நச்சிகேட்டா: சம்பந்தம் என்ன?
கடந்த 1999-ஆம் ஆண்டில் நடைப்பெற்ற கார்கில் போரின்போது, இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் ராணுவம் வசம் சிக்கினார்.
பாகிஸ்தான் ராணுவத்தினரால் ஏறக்குறைய 8 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட நச்சிகேட்டாவை அந்நாட்டு ராணுவத்தினர் பல கொடுமைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் ஆளாக்கினார்கள். ஆனால், இதைப் பார்த்த பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நச்சிக்கேட்டா உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், சர்வதேச குற்றமாகிவிடும் என்று அவரை சித்ரவதையிலிருந்து மீட்டு, இந்திய நாட்டுக்கு திருப்பியனுப்பினார்.
இந்தியா திரும்பிய அவர் ஊடகங்களுக்கு அளித்த ஒரு பேட்டியில், "பாகிஸ்தான் எல்லைக்குள் நான் அனுபவித்த சித்ரவதைகளை ஒப்பிடுகையில் இறப்பதே மேல் என பலமுறை நினைத்தேன்" என தெரிவித்துள்ளார்.
நச்சிகேட்டா-விற்கு நேர்ந்த அவலத்தின் போது ஐநா வரை சென்ற இந்திய அரசு சர்வதேச அளவில் அளித்த நெருக்கடி, அழுத்தம் காரணமாக 8 நாட்களில் பாகிஸ்தான் அரசு நச்சிகேட்டாவை விடுவித்தது. 1999-ஆம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகளிடம் நச்சிகேட்டா ஒப்படைக்கப்பட்டார். மறுநாள் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு நச்சிகேட்டா வந்து சேர்ந்தார்.
அவரை அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், பிரதமர் வாஜ்பாய் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனர். பின்னர் 2000-ஆம் ஆண்டு வாயு சேனா விருது நச்சிகேட்டாவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் எல்லையில் அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். அபிநந்தனை விடுவிக்க கோரி இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் கோரிக்கை முன்வைக்கிறது. இதற்கிடையில் நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவ கட்டுப்பாட்டில் அபிநந்தன் நலமுடன் இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. எனினும் அபிநந்தன் உண்மையில் பாதுகாப்பாக தான் இருக்கின்றாரா என்பது அவர் இந்தியா திரும்பி வரும் போதே தெரியவரும்.