அமித்ஷா தெலங்கானா பயணம் திடீர் ரத்து - காரணம் இது தானா?

Amit Shah Visit Cancelled: மத்திய உள்துறை அமித்ஷாவின் நாளைய ஹைதராபாத் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில தலைவர் ட்விட்டரில் அறிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 14, 2023, 07:07 PM IST
  • கம்மம் பகுதியில் நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்ற இருந்தார்.
  • புயல் காரணமாக அமித்ஷாவின் சுற்றுப்பயணம் ரத்து.
  • மேலும், அங்கு ஆளுங்கட்சியின் எம்எல்ஏக்களின் வீட்டில் ஐடி சோதனை.
அமித்ஷா தெலங்கானா பயணம் திடீர் ரத்து - காரணம் இது தானா? title=

Amit Shah Visit Cancelled: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (ஜூலை 15) தெலங்கானா மாநிலத்திற்கு பயணிக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், அவரின் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சஞ்சய் பண்டி இன்று தெரிவித்தார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் பண்டி கூறுகையில், மேற்கு கடற்கரையில் கடுமையான புயல் சூழல் உள்ளது என்றும் இந்த நிலைமையின் காரணமாக அமித்ஷாவின் தெலங்கானா வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். ஐதராபாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்மம் பகுதியில் நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்ற இருந்தார்.

இதுகுறித்து சஞ்சய் பாண்டி தனது ட்விட்டர் பக்கத்தில்,"மேற்கு கடலோரப் பகுதிகளில், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் கடுமையான புயல் நிலவுவதால், நாளை கம்மத்தில் நடைபெற இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார். 

தெலங்கானாவில் பாஜகவுக்கு எதிரான அலை கடுமையாக உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. பாரத் ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) என தேசிய கட்சியாக மாற்றமடைந்துள்ள தெலுங்கு ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) அங்கு கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாஜகவுக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறார். 

மேலும் படிக்க | BP மாத்திரைகள் கொடுத்து தாயை கொன்ற மகள்... உடலை சூட்கேஸில் அடைத்து சென்று போலீஸில் சரண்!

அங்கு ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தராஜன் உடன் தொடர்ந்து முரண்பட்டு வருவது முதல், மாநிலத்திற்கு பிரதமரே வந்தாலும் நேரில் சென்று வரவேற்காதது என பாஜகவுக்கு எதிரான முன்னெடுப்புகளை தொடர்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி, புதிய மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் தெலங்கானா எம்எல்சியும், சந்திரசேகர ராவ்வின் மகளுமான கவிதா அமலாக்கத்துறையால் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது அங்கு பாஜகவுக்கு எதிரான அலையை அதிகமாக்கியது எனலாம்.   

தற்போது தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அதேபோல், தெலங்கானாவின் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் வீட்டிலும், அவர்கள் சார்ந்த இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

ஹைதராபாத்தில் 70 குழுக்களுடன் பிஆர்எஸ் எம்எல்ஏ பைலா சேகர் ரெட்டி வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிஆர்எஸ் எம்எல்ஏ பைலா சேகர் ரெட்டி மற்றும் ஊழியர்களின் வீடுகளில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மூன்று நாட்களுக்கு சோதனை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. பிஆர்எஸ் புவனகிரி எம்எல்ஏ பைலா சேகர் ரெட்டி பல நிறுவனங்களில் பினாமியாக இருப்பதாக கூறப்படுகிறது. 15 நிறுவனங்களில் முதலீட்டாளராக உள்ளார். எம்எல்ஏ வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான மேலும் விவரங்கள் தெரிய வர வேண்டும்..

பிஆர்எஸ் எம்பி கேயபிரபாகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாகர் கர்னூல் எம்எல்ஏ மர்ரி ஜனார்தன் ரெட்டிக்கு சொந்தமான வணிக வளாகத்திலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும் படிக்க | லுங்கிகள் - நைட்டிகளுக்கு தடை... குடியிருப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த RWA!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News