மோடிக்கு கடிதம் எழுதியதால் இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கு ரத்து!!
கால்நடை வியாபாரிகள், தலித்துகள், திருட்டு, குழந்தை கடத்தல் என சந்தேகத்திற்கு ஆளான நபர்கள், தனியாக சிக்கினால் அவர்களை கும்பல் கும்பலாக கூடி மூர்க்கத்தனமாக தாக்குவதும், உயிரிழப்புக்கு காரணமாக இருப்பதும் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது.
சட்டம் ஒழுங்கு மீறல் பிரச்சினையாக கருதப்பட்டாலும், திட்டமிட்டே அந்நிய சக்திகளாலும் சமூக விஷமிகளாலும் இந்த கலாசாரம் இந்தியாவுக்குள் பரவி வருவதாக ஆர்.எஸ்.எஸ் கருத்து தெரிவித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு 49 கலைஞர்கள் கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தனர்.
உயரிய விருதுகளைப் பெற்ற திரைப்பட இயக்குனர்கள் அடூர் கோபாலகிருஷ்ணன், அபர்ணா சென், மணிரத்னம், மதுர் பண்டார்கர், அனுராக் காஷ்யாப், நடிகைகள் ரேவதி, வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர். இந்நிலையில் பீகாரில் மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் சதார் காவல்நிலையத்தில் 49 பேர் மீது போலீசார் தேசதுரோக வழக்குப் பதிவு செய்தனர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.
இதே போன்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் உள்ளிட்டோரும் பிரதமருக்கு கடிதம் எழுதினர். தங்கள் மீது தொடரப்பட்ட வழக்குக்கு காரணமாக இருந்த அறிக்கை உண்மையானதென்றால் அரசியல் சாசனத்தையே சந்தேகப்பட நேரிடும் என்று இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 49 பேர் மீதான வழக்கை ரத்து செய்துள்ள பீகார் போலீசார், போதிய ஆதாரங்களில்லாமல் தவறான தகவல்களின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே பொய் புகார் அளித்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.