தென் இந்தியாவில் பிஜேபி-யை பலப்படுத்தத் தயாராகி வருகிறோம்: ராம் மாதவ்

2019-ல் வரவிருக்கும் லோக் சபா தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தென் இந்தியாவில் தனது பிரவேசத்தை பலப்படுத்தத் தயாராகி வருகிறது என பிஜேபி தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2018, 07:01 PM IST
தென் இந்தியாவில் பிஜேபி-யை பலப்படுத்தத் தயாராகி வருகிறோம்: ராம் மாதவ் title=

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு, பா.ஜ. கட்சி மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருகிறது. 

கடந்த லோக்சபா தேர்தலில் பிஜேபி தலைமையிலான கூட்டணி 336 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் பிஜேபி மட்டும் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த முறை அது சாத்தியமா என்றால், தற்போது நடைபெறும் அரசியல் சூழ்நிலையை வைத்து பார்த்தால், அது மிகவும் கடினம் என்றே தெரிகிறது.

இந்த நிலையில் பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவிடம் கேட்டபோது, அவர் கூறியது, பீகாரை பொருத்த வரை லோக்ஜனசக்தி கட்சியுடன் எந்தவித பிரச்னையும் இல்லை. பிஜேபி கூட்டணி அரசியலை புறக்கணிக்கவில்லை. கூட்டணி ஒருங்கிணைந்து செல்லவே கட்சி விரும்புகிறது. ஆனால் சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. அதை சரிசெய்ய புதிய கட்சிகளை சேர்க்க முயற்சிக்கிறோம். குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் நல்ல கூட்டணியை அமைக்க பிஜேபி முயற்சித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். ராகுல் காந்தியை முன்வைத்து தேர்தலை சந்திப்பது மூலம் காங்கிரசுக்கு நன்மைபயக்குமா? அல்லது காங்கிரஸ் கட்சிக்கு இழப்பு ஏற்ப்படுமா? என்பது பற்றி கருத்து சொல்ல முடியாது. அதேவேளையில் சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் சிறிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பதையும் மறுக்க முடியாது எனவும் கூறினார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்பது எப்பொழுதும் எங்கள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் தற்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் அடுத்த பெஞ்ச் ஜனவரி 4 தேதியை வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறோம். அப்படி நடக்கவில்லை என்றால், அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திபோம் எனவும் கூறினார். 

ராம் மாதவ் கூறுவதை வைத்து பார்த்தால், உத்தரப் பிரதேசத்தில் ஒருவேளை சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி சாத்தியமானால், அதனால் ஏற்ப்படும் இழப்பை பிற மாநிலங்கள் மூலம் ஈடுசெய்ய நினைக்கிறது என்றே தோன்றுகிறது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளதால், தென்னிந்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் சில இடங்களைப் பெறுவதன் மூலம் இந்த மூன்று மாநிலங்களில் ஏற்ப்படும் இழப்பை சரிசெய்யலாம் என்று விரும்புகிறது.

எப்படியாவது 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான 272 இடங்களை பெற பாஜக விரும்புகிறது.

Trending News