‘கஃபே காஃபி டே’ நிறுவனத்தின் இடைக்கால தலைவராக கர்நாடகாவின் முன்னாள் தலைமை செயலர் எஸ்.வி.ரங்கநாத் நியமனம்!!
பெங்களூர்: காபி டே நிறுவனர் சித்தார்த்தா, கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டார். நீண்ட தேடுதலுக்குப் பின், அவரது உடல் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் தற்காலிக தலைவராக, எஸ்.வி.ரெங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
காபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தா (58). இவருக்கு ரூ 7000 கோடி கடன் ஏற்பட்டது. இதை அடைக்க எத்தனையோ முறை போராடியும் முடியவில்லை. இறுதியாக காபி டே நிறுவனத்தை கோகோ கோலா நிறுவனத்திற்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை மங்களூருக்கு தொழில் விஷயமாக தனது காரில் சித்தார்த்தா சென்று கொண்டிருந்தார். அப்போது உல்லால் அருகே உள்ள நேத்ராவதி ஆற்று பாலத்தில் காரை நிறுத்துமாறு கூறிய சித்தார்த்தா, தன் டிரைவரிடம் சற்று தொலைவில் காத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வராததால் அவரை தேடி அலைந்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை, செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. இதையடுத்து புகாரின் பேரில் போலீஸார் தேடுதல் வேட்டையை நடத்தினர். இதில் 36 மணி நேரத்துக்கு பிறகு சித்தார்த்தாவின் உடல் கரை ஒதுங்கியது.
சித்தார்த்தா மறைவையொட்டி இந்தியாவில் உள்ள காபி டே நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சித்தார்த்தா மறைவால் அவர் வகித்து வந்த தலைவர் பதவிக்கு எஸ்வி ரங்கநாத் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தலைமையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிர்வாக இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது.