காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற கல்வீச்சுத் தாக்குதலில் சிக்கிய சென்னை இளைஞர் பரிதாபமாகப் பலியானார். அம்மாநில முதல்வர் மெஹ்பூபா முஃப்தி மருத்துவமனைக்கு நேரில் வந்து தமிழக இளைஞரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த திருமணி என்ற இளைஞர் காஷ்மீர் மாநிலத்துக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பர்காம் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தக் கல்வீச்சுத் தாக்குதலில், அந்த வழியாகக் காரில் சென்ற தமிழக இளைஞர் திருமணி மற்றும் அவருடன் பயணித்த சுற்றுலாப் பயணிகளும் சிக்கினர்.
இந்த சம்பவத்தில் திருமணிக்குத் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஶ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, மருத்துவமனைக்கு மாநில முதல்வர் மெஹ்பூபா முஃப்தி நேரில் சென்று திருமணியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார். திருமணியின் பெற்றோர் ''அமைதியான சுபாவம் கொண்ட என் மகன் அதிர்ந்துகூடப் பேசமாட்டான். யாருக்கும் எந்தவிதத் தொந்தரவும் கொடுக்கமாட்டான். அவனுக்கு இப்படியொரு நிலையாகிவிட்டதே...'' என்று கதறியழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
Jammu & Kashmir: CM Mehbooba Mufti met family member of tourist from Chennai who suffered injuries and later died. The vehicle he was travelling in had come under stone pelting at Narbal bridge on Sringar-Gulmarg road earlier today. pic.twitter.com/N5AIclqr0a
— ANI (@ANI) May 7, 2018