கடந்த சில மாதங்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த 63 வயதான கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று இரவு காலாமானார். இன்று அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு முழு அரசு மரியாதையுடன் மனோகர் பாரிக்கர் உடல் தகனம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாகவே கோவா அரசியலில் புதிய திருப்பம் ஏற்ப்பட்டு உள்ளது. சமீபத்தில் பாஜக எம்எல்.ஏ. பிரான்ஸிஸ் டி சோசா மரணம் அடைந்தார். இவரது மறைவையடுத்து பாஜக-வுக்கு பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லை என்றும் தங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது கோவா முதல்வர் மரணமடைந்துள்ளதால், கோவாவில் ஆட்சி அமைக்க தங்களை ஆளுநர் மிருதுளா சின்ஹா அழைப்பு விடுக்க வேண்டும் எனக்கோரிக்கையுடன் கடிதம் எழுதியுள்ளது காங்கிரஸ்.
கோவா மாநிலத்தில் 40 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 2017 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், மஹாராஷ்ட்ரவாடி கோமண்டக் கட்சி 3 இடங்களிலும், கோவா பார்வேட் கட்சி 3 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும் மற்றும் சுயேச்சைகள் 3 பேர் மூன்று இடத்திலும் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தநிலையிலும், எம்ஏஜி, ஜிஎப்பி மற்றும் மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் போன்றோருடன் கூட்டணி அமைத்து 23 இடங்களுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
இரண்டு பிஜேபி எம்.எல்.ஏ-க்களின் மரணம் மற்றும் இரண்டு காங்கிரஸ் தலைவர்களின் ராஜினாமா செய்துள்ளதால கோவா சட்டசபையில் நான்கு இடங்கள் காலியாக உள்ளது. 36 இடங்களுக்கு மட்டும் உறுப்பினர்கள் உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, பாஜக-வின் பலம் 12 ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் 14 எம்எல்ஏ-க்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இந்தநிலையில், கூட்டணி கட்சிகளுடன் பாஜக ஆலோசனை செய்து வருகிறது.