மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டிம் என குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்...
பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவது என முடிவு செய்தன. இந்த இரு கட்சிகளும் காங்கிரசுடன் இணைந்து பலமாக கூட்டணி அமைத்து பாஜகவுடன் மோதும் என எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
எனினும், தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் செய்துகொண்ட சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர்கள் ராகுல் காந்தியின் அமேதி தொகுதி மற்றும் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் எங்கள் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று அறிவித்தனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநில அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்களின் அவசர கூட்டம் இன்று லக்னோ நகரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய முன்னாள் மந்திரி குலாம் நபி ஆசாத், ‘‘சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி குறித்தோ, அதில் காங்கிரஸ் சேர்க்கப்படாதது குறித்தோ உடனடியாக கருத்து கூற இயலாது. மத்திய மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேச பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளோம். மக்களவைத் தேர்தலுக்காக மாவட்ட அளவிலான தயார் நிலை குறித்து அப்போது ஆராயப்படும்’’ என்றார்.
இதுகுறித்து, உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் அன்ஷு அவஸ்தி கூறுகையில், “மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் வியூகம் தொடர்பாக கலந்தாலோசிக்க குலாம் நபி ஆசாத், கட்சியின் மாநிலத் தலைவர் ராஜ் பப்பர் ஆகியோர் லக்னோவில் இன்று மாலை வருகின்றனர். இக்கூட்டத்தில், கட்சியின் தேசிய கமிட்டியில் உள்ள உத்தரப் பிரதேசத் தலைவர்கள் அனைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர்களும் பங்கேற்கின்றனர்’ என்றார்.
GN Azad: We will fight on all 80 seats of Uttar Pradesh in upcoming Lok Sabha elections. We are fully prepared. And just like Congress emerged no. 1 party in Uttar Pradesh in 2009 Lok Sabha elections, we'll fight on our own & win twice those no. of seats in upcoming elections pic.twitter.com/v8MkY6EPMK
— ANI UP (@ANINewsUP) January 13, 2019
‘உத்தரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் அதிக தொகுதிகளை வெல்லக் கூடும்’ என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுவதால், ‘மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதைத் தவிர காங்கிரசுக்கு வேறு வழியே இல்லை’ என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து உ.பி. முதல்வர் ஆதித்யநாத், “எவ்வளவு பெரிய கூட்டணி பாஜவுக்கு எதிராக அமைந்தாலும் சரி, நாங்கள் 2014 ஆம் ஆண்டைவிட இந்த முறை மிகச் சிறப்பான வெற்றியைப் பெறுவோம். வெகு நாட்களாக அரசியல் எதிரிகளாக இருந்த இருவர், ‘மகா கூட்டணி’ குறித்து பேசுகிறார்கள். சர்வாதிகாரத்துக்கும், ஊழலுக்கும், ஸ்திரமற்ற ஆட்சிக்கும்தான் இந்தக் கூட்டணி வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.