கொல்கத்தா: சித்ராங் சூறாவளியின் தாக்கத்தால், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ், வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாபூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது... வங்கதேச தலைநகர் டாக்காவிலும் அடை மழை தொடர்கிறது... பல பகுதிகளில் தீவிர எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் உள்ளது. வங்கக் கடலில் உருவான சித்ராங் புயல் வடகிழக்கு திசையை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வந்து இன்று (அக்டோபர் 25) காலை வங்கதேச கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள சிட்ராங் சூறாவளியால் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, பல பகுதிகளில் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் மழைக்காலம் தொடங்கியது
சித்ராங் புயல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் தீபாவளி பண்டிகை நாளான திங்கள்கிழமை அன்று, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது. இயல்பு வாழ்க்கை மட்டுமல்ல, தீபாவளி கொண்டாட்டங்களும் மழையால் தடைபட்டது. அடுத்த 48 மணி நேரத்தில் திரிபுராவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்புகளை சமாளிக்க, ஊழியர்களின் விடுமுறையை திரிபுரா மாநில அரசு ரத்து செய்துள்ளது. அகர்தலாவில் அனைத்து விமானச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. வடகிழக்கு எல்லை ரயில்வே இரண்டு நாட்களுக்கு சிறப்பு ரயில்களை ரத்து செய்துள்ளது.
மேலும் படிக்க | சனீஸ்வரரால் பிரச்சனை முடிந்தாலும் சிக்கலைக் கொடுக்க தயாராகிவிட்டார் புதன்
வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் உச்சகட்ட எச்சரிக்கை
NDRF இன் 120 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கவுகாத்தியில் இருந்து திரிபுராவின் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எட்டு வடகிழக்கு மாநிலங்களில் சூறாவளி குறித்து உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும்,பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் முகாம்கள் எச்சரிக்கையுடன், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் தயாராக உள்ளன.
சாத்தியமான பகுதிகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்குமாறு மாநில அரசுகள் NDRF இடம் கேட்டுக் கொண்டுள்ளன.
கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகள்
அடுத்த 48 மணி நேரங்களுக்கு, திரிபுரா, மேகாலயா, அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மீனவர்கள் அக்டோபர் 25ஆம் தேதி கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பல பகுதிகளில் தகவல் தொடர்பு மற்றும் மின் விநியோகம் தடைபடும் வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | நாடு முழுவதும் தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம்: களைகட்டும் தீப ஒளியின் குதூகலம்
தயார் நிலையில் ராணுவம் மற்றும் மத்திய துணை ராணுவப் படைகள்
திரிபுராவின் 8 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். அதிகபட்சமாக 200 மிமீ மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அசாம் மாநிலத்தின் கச்சார், கரீம்கஞ்ச் மற்றும் ஹைலகண்டி மாவட்டங்களிலும், மிசோரமின் அனைத்து 11 மாவட்டங்களிலும், நாகாலாந்து மாவட்டங்களிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, அகர்தலாவில் நிலைமையை ஆய்வு செய்தார். திரிபுரா அரசு, ராணுவம் மற்றும் மத்திய துணை ராணுவப் படைகளின் உதவியையும் நாடியுள்ளது.
மேலும் படிக்க | சுக்கிரனின் மாளவ்ய யோகத்தால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடும் ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ