வர்தா புயல்: சென்னை, ஆந்திரா அதிக எச்சரிக்கை

Last Updated : Dec 12, 2016, 08:47 AM IST
வர்தா புயல்: சென்னை, ஆந்திரா அதிக எச்சரிக்கை title=

வங்கக் கடலில் உருவாகி உள்ள "வர்தா' புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல் சென்னை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தப் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

புயல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

கடந்த சில தினங்களுக்கு முன், தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதற்கு "வர்தா' என பெயரிடப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையில் கரையை கடக்கும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இது மேற்கு தென்மேற்காக நகர்ந்து வருகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியதாவது:

வர்தா புயல் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையில் இருந்து 370 கி.மீ தூரத்தில் கொண்டுள்ளது. மணிக்கு 18 கி.மீ., வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகலில், வடக்கு தமிழகத்தின் கடலோரப் பகுதியில் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் மழை பெய்யக்கூடும். படிப்படியாக இந்த மழையின் அளவு அதிகரித்து திங்கள்கிழமை காலை முதல் அடுத்த நாள் காலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மற்றும் அதிக கனமழை பெய்யக்கூடும். மேலும் கடல் சீற்றம் அதிகம் இருக்கும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.

வர்தா புயல் ஆந்திராவின் அருகில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பாதிப்புகளை தவிர்க்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு  நாயுடு அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் வீடியோ  கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது: தீவிர புயலால் ஏற்படும் பாதிப்பை தடுக்க  தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும். 
நிலைமையை உன்னிப்பாக கவனித்து அரசு அதிகாரிகள் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான அளவு உணவு, மின்சார கம்பங்கள், சிமென்ட் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

வர்தா புயலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

வர்தா புயல் இன்று கரையைக் கடக்க உள்ள நிலையில், மீட்புப் பணிக்கு கப்பல், விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மற்றும் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று பிற்பகல் சென்னை அருகே புயல்  கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Trending News