லக்வார் அணை நீரை பங்கீடு; 6 மாநில முதல்வர்கள் ஒப்பந்தம்!

லக்வார் அணையின் நீரை பங்கீடு செய்யும் திட்டத்திற்கு 6 மாநில முதல்வர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக்கொண்டனர்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2018, 07:02 PM IST
லக்வார் அணை நீரை பங்கீடு; 6 மாநில முதல்வர்கள் ஒப்பந்தம்! title=

லக்வார் அணையின் நீரை பங்கீடு செய்யும் திட்டத்திற்கு 6 மாநில முதல்வர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக்கொண்டனர்!

யமுனை ஆற்றில் குறுக்கே உள்ள லக்வார் அணையில் இருந்து நீரை பங்கீடு செய்யும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் டெல்லி, ஹரியானா, உத்திரபிரதேஷ், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேஷ், உத்ரகாண்ட் ஆகிய 6 மாநில முதல்வர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

யமுனை ஆற்றில் ஜனவரி மாதம் துவங்கி மே மாதம் வரை நீர்வரத்து இருப்பதில்லை. இந்த காலங்களில் யமுனை ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளில் தேக்கப்படும் நீரை பங்கிட்டு கொள்வதில் ஆறு மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை நிலவி வருவது வழக்கமாகியுள்ளது.

தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் யமுனை ஆற்றின் குறுக்கே லக்வார் அணை தற்போது கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த அணையிலிருந்து வறட்சி காலங்களில், 6 மாநிலத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு நீரை கொண்டு செல்ல 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக மத்திய நீர்வளத்துறை, கங்கை மறுசீரமைப்பு மற்றும் ஆறுகள் மேம்பாட்டுத்துறை மற்றும் 6 மாநில முதல்வர்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 

இதற்கான நிகழ்ச்சி இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், இமாச்சரப்பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், லக்வார் அணை நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

Trending News