AK 203 ரக துப்பாக்கி தயாரிக்கும் ஆலையை உத்திரபிரதேச மாநிலத்தில் துவங்கி வைத்தார் பிரதமர் மோடி!
AK 203 துப்பாக்கி தயாரிக்கும் ஆலையை உபி-யில் துவங்கி வைத்த பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்த துப்பாக்கிகள் மிகப்பெரும் துணையாக இருக்கும் என தெரிவித்தார்.
உத்திரபிரதேச மாநிலம் சென்ற பிரதமர் மோடி ரூபாய் 538 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தார். அதன் ஒருபகுதியாக உ.பி-யின் கோர்வாவில் கலாஷ்னிகோவ் துப்பாக்கி தயாரிக்கும் தளவாடத் தொழிற்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ரஷ்யாவுடன் கையெழுத்தான ஒப்பந்தப்படி இந்த தொழிற்சாலையில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தேவையான ஏழரை லட்சம் AK 203 ரக தாக்குதல் துப்பாக்கிகள் தயாரிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில், உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், AK 203 ரக துப்பாக்கி தயாரிப்புக்காக இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தான பெருமை பிரதமர் மோடியையே சேரும் என தெரிவித்தார். மேலும் அடுத்து வரும் 3 ஆண்டுகளில் AK 203 ரைஃபில்களின் அனைத்து உதிரிபாகங்களும் உள்நாட்டிலேயே தயாராகும் எனவும் குறிப்பிட்டார்.
இவரை தொடர்ந்து உரையாற்றிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி வெற்றிகளில் புதிய உச்சம் தொட்டு வருவதாக பெருமை தெரிவித்தார். இதற்கு முன்பு தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த போதும், இதுபோன்ற பதிலடி கொடுக்கப்பட்டதில்லை என குறிப்பிட்டார்.
இதனையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, அமேதி தொகுதியில் வாக்குகளைக் கொண்டு மக்களிடையே தாம் பாகுபாடு பார்க்கவில்லை எனவும், இனிமேல் அமேதி என்பது அங்கு வந்த தலைவர்களைக் கொண்டு அடையாளப் படுத்தப்படாமல் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு அடையாளப் படுத்தப்படும் என தெரிவித்தார்.
AK 203 தயாரிப்பு குறித்து பேசிய அவர்., நக்சலைட்டுகள், பயங்கரவாதிகளையும் எதிர்த்து போராடும் நமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இந்த AK 203 ரக துப்பாக்கி மிகப்பெரும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். அமேதி தளவாடத் தொழிற்சாலையில் என்ன ஆயுதம் தயாரிப்பது என்றே தெரியாமல் முந்தைய அரசு இருந்ததாகவும், நமது வீரர்கள் புல்லட் புரூப் கவசமின்றி எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் மோடி குற்றம் சாட்டினார்.
இவ்வளவு குறுகிய காலத்தில் AK 203 ரக துப்பாக்கி தயாரிப்பை சாத்தியமாக்கியதற்காக தமது நண்பரான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நன்றி சொல்ல விரும்புவதாக மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.