புதுடெல்லி: கோவா மாநிலம் ட்யோபத்திலிருந்து மும்பை புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் 9W 2374 விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதில் 12 பேர் காயமடைந்தனர்.
இந்த விமானத்தில் 154 பயணிகள், 7 ஊழியர்கள் இருந்தனர். விமானம் ஓடு தளத்தில் ஓடத்தொடங்கியபோது திடீரென கடுமையாக குலுங்கியபடி ரன் வேயிலிருந்து நழுவி ஓடத் தொடங்கியது. இதனால் ரன் வேயிலிருந்து விமானம் கீழே இறங்கியது. இருப்பினும் அதற்கு மேல் ஓடவிடாமல், தக்க நேரத்தில் பைலட் விமானத்தை கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்.
இதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கவனித்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக, சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினரும், முதலுதவி குழுவினரும் அந்த இடத்துக்கு விரைந்தனர். விமானத்தில் உள்ள பயணிகளை அவசரமாக இறக்கும் ஏணி படிக்கட்டும் அனுப்பி வைக்கப்பட்டது.
அவசர பாதையின் வழியாக கீழே இறங்குவதற்கு உள்ளே இருந்த பயணிகள் முந்தியடித்து விமானத்தின் முன்பக்கத்தில் ஒரேநேரத்தில் குவிந்ததால், முன்பகுதி சற்றே சரிந்ததாக கூறப்படுகிறது.
சேதமடைந்த ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால், பிற்பகல் வரை கோவா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.