சிறுபான்மை மக்களைப் பாதுகாத்திடுங்கள் என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த அறிஞர்கள் மீது, தேசத்துரோக வழக்கு பதிந்திருப்பது கண்டனத்திற்குறியது என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது நண்பர்கள் 49 பேர் மீதான தேச துரோக வழக்கை ரத்துசெய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.,, பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை நாடுகிறார். நாடாளுமன்றத்தில் அவர் வெளியிட்ட அறிக்கைகள் அதை உறுதிப்படுத்துகின்றன. அரசு மற்றும் அதன் சட்டம் அதை கடிதத்திலும், உணர்வுகளிலும் பின்பற்ற வேண்டாமா? எனது நண்பர்களில் 49 பேர் பிரதமரின் விருப்பத்திற்கு முரணாக தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
I request as a citizen that Our Higher courts move in to uphold justice with Democracy and quash the case eminating from Bihar. (2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) October 8, 2019
ஜனநாயக முறைப்படி எங்கள் உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டவும், பீகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் ஒரு குடிமகனாக நான் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கு கோரி திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கடந்த ஜூலை 24-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.
மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், கொங்கொனா சென் சர்மா, சவுமிதா சாட்டர்ஜி உள்பட 50 திரைப் பிரபலங்கள் கூட்டாகச் சேர்ந்து அந்த கடிதத்தில் நீண்ட கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில் பிரபலங்கள் குறிப்பிட்டதாவது,“நாட்டில் மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, அர்பன் நக்சல் என முத்திரை குத்தப்படுவதை ஏற்க முடியாது. எந்த ஒரு குடிமகனும் தமது சொந்த தேசத்தில் உயிர் அச்சத்துடன் வாழக்கூடாது” என்பது உள்ளிட்ட பல கருத்துகளை குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த மனுவில், நாட்டின் உருவாக்கத்தை சீர்குலைத்ததாகவும், பிரதமரின் செயல்திறனுக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு கையெழுத்திட்ட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.