'காந்தி அல்லாதவர்கள்' காங்கிரஸ் தலைவராக இருக்க முடியும், ஆனால் காந்தி குடும்பம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்!!
மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி முன்வந்துள்ளார். அவரை பதவியில் நீடிக்கும்படி, கட்சி பிரமுகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், ராகுல் காந்தி பிடிவாதமாக மறுத்து வருகிறார். இந்நிலையில், காங்., மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் ஞாயிற்றுக்கிழமை ஒரு 'காந்தி அல்லாதவர்' கட்சித் தலைவராக இருக்க முடியும், ஆனால் காந்தி குடும்பம் அமைப்புக்குள் தீவிரமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மணிசங்கர் அய்யர் PTI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; வேறு தலைவரை தேர்ந்தெடுக்க ராகுல் காந்தி ஒரு மாதம் அவகாசம் அளித்துள்ளார். அதுபற்றி கட்சிக்குள் ஆலோசனை நடந்து வருகிறது. ராகுல் காந்தி நீடிப்பதையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். அந்த அவகாசம் முடியும்வரை எல்லோரும் காத்திருக்க வேண்டும். அதற்குள் யூகங்களை வெளியிடக்கூடாது.
ராகுல் காந்தியே நீடிப்பது நன்றாக இருக்கும். ஆனால், அதே நேரத்தில் ராகுல் காந்தியின் சொந்த விருப்பத்தையும் மதிக்க வேண்டும். நேரு குடும்பத்தை சேராதவர் காங்கிரஸ் தலைவராக இருக்கலாம். ஆனால், நேரு குடும்ப உறுப்பினர்கள், கட்சியில் தீவிர பங்கெடுப்பதுடன், கடுமையான கருத்து வேறுபாடுகள் எழும்போது அதை தீர்க்க உதவி செய்தால், அவர்கள் தலைமை பொறுப்பில் இல்லாமலேயே நாம் நிலைத்திருக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.
நேரு குடும்பத்தை சேராதவர்கள் காங்கிரஸ் தலைவராக இருந்த முன்னுதாரணங்கள் உள்ளன. யு.என்.தேபாரில் இருந்து பிரமானந்த ரெட்டிவரை இருந்துள்ளனர். அதே மாதிரியை இப்போதும் பின்பற்றலாம். சோனியா காந்தி, பாராளுமன்ற காங்கிரஸ் தலைவராக இருப்பது நமக்கு தெரியும். ராகுல் காந்தியும், பாராளுமன்றத்தில் இருக்கிறார். எனவே, தலைமை பொறுப்பில் ராகுல் காந்தி இருந்தாலும் சரி, வேறு யாராவது இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சி மீண்டு வரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
‘நேரு குடும்பம் இல்லாத காங்கிரஸ்’ கட்சியை உருவாக்கி, அதன்மூலம், ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ என்பதை அடைவதுதான் பா.ஜனதாவின் நோக்கம். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி கணக்கில் தவறு செய்துவிட்டது. அந்த கணக்கையும் சரிவர பின்பற்றவில்லை. எனவே, ‘கெமிஸ்ட்ரி’ வேலைக்கு ஆகவில்லை. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும்தான் இந்த கணக்கு நன்றாக வேலை செய்தது. காங்கிரசை விட தி.மு.க. நன்றாக முன்முயற்சிகளை எடுத்தது.
காங்கிரஸ் கட்சி, நீண்ட காலம் இயக்கமாகவே இருந்தது. பிரிந்து சென்ற கட்சிகளை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும். தங்களது தனிப்பட்ட அடையாளங்களை இழக்காமல், ஒரே குடும்பமாக நீடிக்கலாம் என்று சொல்ல வேண்டும். கருத்து ஒற்றுமை கொண்ட கட்சிகளை ஓரணியில் திரட்ட வேண்டும். தேர்தல் வரும்போது, அதை தேர்தல் கூட்டணியாக மாற்றுவது பற்றி பரிசீலிக்கலாம். பா.ஜனதாவின் சவாலை சமாளிக்க அதுதான் வழி.
காங்கிரஸ் கட்சி, மென்மையான இந்துத்துவா கொள்கையை பின்பற்றியதாக கூறப்படுவதை நான் ஏற்கவில்லை.