மத்தியப் பிரதேச மாநிலம், மண்ட்சோரில் ரூ. 30,000 மதிப்புள்ள வெங்காயத்தை மர்ம நபர்கள் அறுவடை செய்து எடுத்துச் சென்று விட்டதாக விவசாயி ஒருவர் புகாரளித்துள்ளார்.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மண்ட்சோர் மாவட்டம், ரிச்சா பச்சா கிராமத்தைச் சோ்ந்த ஜிதேந்திர குமார் என்ற விவசாயிக்கு சொந்தமான 1.6 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த வெங்காயத்தை மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் புகுந்து அறுவடை செய்து திருடிச் சென்று விட்டதாக நாராயங்கர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதுகுறித்து காவல்நிலைய ஆய்வாளர் ஆா்.எஸ்.பில்வால் கூறுகையில், ‘திருடப்பட்ட வெங்காயம் ரூ .30,000 மதிப்புடையது என்று புகாரளித்துள்ளார். புகார் விவரங்களை மதிப்பிடுவதற்காக ஒரு குழு அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்களது மதிப்பீட்டிற்குப்பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’, என்று பில்வால் கூறினார்.