புல்வாமா தாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பவாட் சவுத்ரி தெரிவித்துள்ளார்!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தில் மோதி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 40 வீரர்கள் பலியாகினர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் பவாட் சவுத்ரி தெரிவிக்கையில்,.. இந்தியாவில் எந்த தாக்குதல் நடந்தாலும் உடனேயே இந்தியா, பாகிஸ்தானை குற்றம்சாட்டுகிறது. அரசியல் காரணங்களுக்காக கூறப்படும் இந்த குற்றச்சாட்டில் எந்த அர்த்தமும் இல்லை. இரண்டு பக்கமும் உள்ள சில சக்திகள் இயல்பு நிலையை விரும்புவதில்லை.
அதுபோல தான் தற்போது நடைப்பெற்றுள்ள புல்வாமா தாக்குதல் உள்நாட்டு போராட்டம் காரணமாக நடந்துள்ளதாக தெரிகிறது.
மிகவும் சாதகமான நாடுகள் அந்தஸ்தில் இருந்து இந்தியா பாகிஸ்தானை நீக்கியது துரதிர்ஷ்டவசமானது. ஜெய்ஷ் என்ற பெயரில் பல அமைப்புகள் உள்ளன. இதில் ஆதாரங்கள் இருந்து, அவற்றை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார் என தெரிவித்துள்ளார்.