ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் தனியார் இணையதளம் ஒன்றில் வெளியானதாக புகாரின் பெயரில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை மராட்டிய போலீஸார் கைது செய்தனர்.
மிக குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கியது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இதனால் மற்ற நிறுவனங்களும் சலுகைகளை அள்ளி வழங்கின. ஜியோ அறிவித்த குறைந்த விலையில் 4ஜி டேட்டா திட்டத்தால் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தன.
இந்நிலையில் 100 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளரின் பெயர், இ-மெயில் ஐ.டி, மொபைல் எண், ஆதார் எண், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன தேதி உள்ளிட்ட தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல்கள் வந்து இருந்தது.
இது குறித்த செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்ததுடன் தங்களது வாடிக்கையாளர்களின் விபரங்கள் முழு பாதுகாப்போடு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இது தொடர்பான புகாரில் ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான் ஷிம்பா ஒருவரை மராட்டிய மாநில சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில், பொறியியல் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த இளைஞர் ஹேக்கராக செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.