நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் பல்வேறு ஐகோர்ட் நீதிபதிகள் மட்டுமல்லாமல் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் மீதும் தமிழகத்தைச் சேர்ந்த கொல்கொத்தா ஐ கோர்டில் பணியாற்றும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினார். இதையடுத்து, அவர் மீது சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.எஸ்.கேஹர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்து நீதிபதி கர்ணனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகள் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதேபோல், தொடர்ந்து கர்ணன் மீது சுப்ரீம் கோர்ட்டும் அதற்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதி கர்ணனும் பரஸ்பரம் உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தனர்.
மேலும் நீதிபதி கர்ணனுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கும் பதிலளித்த நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவை பிறப்பித்தார். தனக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு எதிராக கர்ணன் ஒரு உத்தரவு போட்டார். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்சில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். மேலும், அவரை உடனடியாக கொல்கத்தா போலீசார் கைது செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நீதிபதி கர்ணனின் உத்தரவுகளையும் அவரது பேட்டிகளையும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பவோ, வெளியிடவோ கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் சென்னை விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த நீதிபதி கர்ணனிடம் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சியைச் சேர்ந்த நிருபர்கள் பேட்டியெடுத்தனர். ஐகோர்ட் தடை உத்தரவினால் நீதிபதி கர்ணனின் பேட்டிகள் வெளியிடப்படவில்லை.