சுஷ்மா-க்கு எந்த வேலையும் இல்லை, மக்கள் விசாக்கு நேரத்தை செலவிடுகிறார் -ராகுல்

மோடியின் அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் வேலையில்லாதவராகிவிட்டார் ராகுல் காந்தி விமர்சனம்....! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2018, 11:37 AM IST
சுஷ்மா-க்கு எந்த வேலையும் இல்லை, மக்கள் விசாக்கு நேரத்தை செலவிடுகிறார் -ராகுல் title=

மோடியின் அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் வேலையில்லாதவராகிவிட்டார் ராகுல் காந்தி விமர்சனம்....! 

காங்கிரஸ் கட்சியை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் முயற்சியாக, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர் முதலில் ஜெர்மனி சென்றுவிட்டு, தற்போது இங்கிலாந்து சென்றுள்ளார்.

லண்டனில் ஐஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றுப் பேசினார். மத்திய பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்த ராகுல்காந்தி, பிரதமர் அலுவலகம் வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக குற்றம்சாட்டினார்.

விசா தொடர்பான பிரச்சனைகளில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கவனம் செலுத்துவது குறித்து பலரும் பாராட்டுகிறார்கள் என்று சுட்டிக்காட்டிய ராகுல், அவருக்கு அதைவிட வேறு முக்கிய பணிகள் இல்லாததே இந்த நிலைக்கு காரணம் என்று குறிப்பிட்டார். சுஷ்மா சுவராஜூக்கு உண்மையிலேயே அதிகாரம் கொடுக்கப்பட்டால், அந்த ஏகபோகத்தை அவரால் தகர்க்க முடியும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

எல்லையில் டோக்லம் பிரச்சனை உள்ளிட்டவற்றை மத்திய அரசு கையாண்ட முறை குறித்தும் அவர் குறை கூறினார். டோக்லம் பகுதியில் தற்போதும் சீனப் படைகள் முகாமிட்டு இருப்பதாகவும் ராகுல்காந்தி கூறினார்.

இதை தொடர்ந்து, பிரதமர் மோடியின் வெளியுறவுக்கொள்கை விவகாரத்தில் குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் சீன விவகாரங்களில் கடுமையான தாக்குதலை முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி. இந்திய வெளியுறவுத்துறை மந்திரியின் முழு அதிகாரத்தையும் மோடி தன் பக்கம் இழுத்து வைத்துள்ளார். வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார். 

முன்னதாக, உலக அரசியல் குறித்து கற்பிக்கும் சர்வதேச கல்லூரியில் பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, ஐ,எஸ், பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டு பேசினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்திய அமைப்புகளை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆர்.எஸ்.எஸ். மூலமே நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்...!

 

Trending News