Election 2024: டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் - அம்மாடி தமிழக வேட்பாளர்கள் எத்தனை பேர் பாருங்க?

Top 10 Richest Candidates: ஏப். 19ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட மக்களவை தேர்தலின் டாப் 10 கோடீஸ்வர வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அவர்கள் குறித்தும் அவர்களின் சொத்து மதிப்பு குறித்தும் இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 10, 2024, 10:46 AM IST
  • டாப் 10 பட்டியலில் ஐந்து பேர் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிடுகின்றனர்.
  • இதில் அதிமுகவில் இருவரும், பாஜக கூட்டணியில் இருவரும் இடம் பிடித்துள்ளனர்.
  • காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளர் ஒருவர் 10ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
Election 2024: டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் - அம்மாடி தமிழக வேட்பாளர்கள் எத்தனை பேர் பாருங்க? title=

Top 10 Richest Candidates Phase 1 Lok Sabha Election 2024: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி மற்றும் அட்டவணை கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. ஏழு கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

ஏப். 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே, ஏப். 26, மே 7, மே 13, மே 20, மே 25 என முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது. 

ஏப். 19 அன்று முதற்கட்ட வாக்குப்பதிவு

தற்போது முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், அரசியல் களமும் பரபரப்புடன் காணப்படுகிறது. தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என அனைத்து கட்சிகளும் பரப்புரையில் விறுவிறுப்புடன் பணியாற்றி வருகின்றனர். ஏப். 19ஆம் தேதி வாக்குப்பதிவுக்கு மார்ச் 20ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மார்ச் 28ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. 

மேலும் படிக்க | அதெல்லாம் பொய்யுங்க.. நாங்க சொல்வது தான் உண்மை -தேர்தல் பேரணியில் முழங்கிய அமித் ஷா

மார்ச் 30ஆம் தேதி இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. தொடர்ந்து வரும் ஏப். 17ஆம் தேதி மாலை 5 மணிவரை தேர்தல் பரப்புரை நடைபெறும். அதுமட்டுமின்றி கடைசி கட்ட வாக்குப்பதிவான ஜூன் 1ஆம் தேதி மாலை வரை யாரும் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் இடத்தில் கமல்நாத் மகன்

நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 மக்களவை தொகுதிகளில் வரும் ஏப். 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 102 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் டாப் 10 பணக்காரர்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக, அதில் 5 பேர் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக, அதிமுகவை சேர்ந்த இருவர், பாஜக கூட்டணியை சேர்ந்த இருவர் மற்றும் திமுக கூட்டணியை சேர்ந்த 1 வேட்பாளர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

இந்த பட்டியலில் முதலிடம் பிடிக்கும் வேட்பாளர் மத்திய பிரதேசத்திந் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் இம்முறை மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 716 கோடியாகும். 

தமிழ்நாட்டு வேட்பாளர்கள் யார் யார்?

இரண்டாம் இடத்தை தமிழ்நாட்டின் ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அசோக் குமார் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.662 கோடி ஆகும். மூன்றாம் இடத்தையும் தமிழ்நாட்டின் சிவகங்கை தொகுதியில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் ஆவார். இவரின் சொத்து மதிப்பு ரூ.304 கோடி. 

அதேபோல், பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் வேலூர் போட்டியிடும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் இந்த பட்டியலில் 6ஆவது இடத்தை பிடித்துள்ளார், இவரின் சொத்து மதிப்பு ரூ.152 கோடி ஆகும். அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் ஜெயபிரகாஷ் 7ஆம் இடத்தை பிடித்துள்ளார், இவரின் சொத்து மதிப்பு ரூ.135 கோடியாகும். இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.96 கோடியாகும். 

லிஸ்டில் மற்ற கட்சியினர்

உத்தரகாண்டின் தெஹ்ரி கர்வால் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மாலா ராஜ்ய லட்சுமி ஷா இந்த பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.206 கோடியாகும். தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிடும் மஜித் அலி 5ஆவது இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.159 கோடியாகும். 

தொடர்ந்து, 8வது இடத்தில் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்க் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வின்சென்ட் ஹெச். பாலா உள்ளார், இவரின் சொத்து மதிப்பு ரூ.125 கோடியாகும். 9வது இடத்தில் ராஜஸ்தானின் நாகௌர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஜோதி மிர்தா உள்ளார், இவரின் சொத்து மதிப்பு ரூ.102 கோடியாகும். இந்த டாப் 10 பட்டியலில் பாஜகவின் நான்கு வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களும், அதிமுகவின் இரண்டு வேட்பாளர்களும், பகுஜன் சமாஜின் ஒரு வேட்பாளரும் இடம்பெற்றுள்ளனர். 

மேலும் படிக்க | வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும் எந்தப் பயனும் இல்லை: பிரசாந்த் கிஷோர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News